ராஜஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் கடந்த மாதம் 17 வயது தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.
இவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை மகேந்திரராம் புகார் செய்தார். இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் ஆர்வம் காட்டவில்லை என்றும், எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் வார்டன், முதல்வர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் விஜேந்திரசிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கொலை செய்யப்பட்ட தலித் சிறுமியின் வீட்டுக்கு சென்றார். உத்தார்வை விமானப்படை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.
அங்கிருந்து கார் மூலம் சிறுமியின் கிராமத்துக்கு சென்றார். அவருடன் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் எம்.பி. ஹரிஷ் சவுத்ரி ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு சென்ற ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ஜெய்ப்பூரில் நடந்த தலித் சம்மேளன கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் சிறுமியின் தந்தை மகேந்திரராம் நிருபர்களிடம் கூறும் போது பாரபட்சமற்ற விசாரணை மூலம் எனது மகள் மரணத்துக்கு நீதி பெற விரும்புகிறேன். உள்ளூர் போலீசார் வழக்கை வீணடிக்க முயற்சி செய்கின்றனர். எங்களது கோரிக்கையை மாநில அரசு காது கொடுத்து கேட்காமல் ஒதுக்குகிறது.
ராகுல்காந்தி அங்கு வந்து எங்களது கோரிக்கையை கேட்டார். இப்பிரச்சினையை அவர் எழுப்புவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.