ராகுல்காந்தி வலுவான தலைவராக திகழ்வார்: சோனியாகாந்தி
ராகுல் பதவி ஏற்பு விழாவில் சோனியாகாந்தி பேசியதாவது:-
ராகுல்காந்தியை நான் புகழ்ந்து பேச மாட்டேன். அவர் எனது மகன்.
காங்கிரஸ் தலைவராக நான் கடைசி கூட்டத்தில் உங்கள் முன் பேசுகிறேன். இன்று புதிய யுகம் பிறந்துள்ளது. புதிய தலைமை கிடைத்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்த அதே இடத்தில் நின்று இப்போது நான் பேசுகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது நான் தலைவர் பொறுப்பை ஏற்க மிகவும் கவலைப்பட்டேன். எனது கைகள் நடுங்கியது. வரலாற்று சிறப்புமிக்க பெரிய கட்சியை எப்படி வழி நடத்தப்போகிறமே என்று நினைத்தேன்.
நான் புகுந்த வீடு மிகவும் புரட்சிக்கரமான சித்தாந்தத்தை கொண்டது. நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர்கள் எனது கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் மருமகளாக வந்தபோது இந்திராகாந்தி என்னை தனது மகள் போல ஏற்றுக் கொண்டார். அவரை நான் தாயாக கருதி வாழ்ந்தேன். ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது எனது சொந்த தாயாரை இழந்தது போல் உணர்ந்தேன்.
எனது கணவர் படுகொலை செய்யப்பட்டபோது எனக்கு இருந்த ஆதரவு மீண்டும் பறிக்கப்பட்டது போல நினைத்தேன். இந்த நிலையில் தான் என்னை அரசியலுக்கு அழைத்தனர்.
இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டதால் அரசியலே வேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் அரசியல் வேண்டாம் என்று நினைத்தேன்.
ஆனால் நேரு குடும்பத்து உறுப்பினராக நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையாக அரசியலுக்கு வருவதை கருதினேன். இந்திரா மற்றும் ராஜீவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
எனது தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆட்சியில் அமர வைக்கும் உரிமையை தந்தனர். அதனால் 2004 முதல் 2014 வரை நல்லாட்சியை வழங்க முடிந்தது. மன்மோகன்சிங் மிகவும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார்.
மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.
தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். புதிய தலைமை மீது அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தொண்டர்கள் ஆதரவு இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். தோல்விகளால் நாம் ஓய்ந்து விடமாட்டோம். தற்போது கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உள்ளது.
இதற்காக நாம் அடங்கி விடக்கூடாது. ராகுல்காந்தி மிகவும் வலுவான தலைவராக உருவெடுப்பார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சரியான பாதையில் அவர் நிச்சயம் வழி நடத்துவார்.
காங்கிரஸ் மற்றும் அரசியல் சாசனம் மீது தற்போது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவற்றையெல்லாம் காங்கிரஸ் எதிர்கொண்டு வெற்றி பெறும்.
நாட்டு மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். இந்த நாட்டை பாதுகாப்பதே காங்கிரஸ் கட்சியின் ஒரே லட்சியமாகும். நமது கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாம் அதை துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்.
ராகுல் சிறப்பாக செயல்படுவார். குழந்தை பருவத்தில் இருந்தே அவர் அகிம்சையை கடைப்பிடிப்பவர். அவர் மீது கூறப்படும் விமர்சனங்களும், அவர் மீது நடத்தப்படும் கொள்கை தாக்குதல்களும் அவரை பயம் இல்லாதவராக மாற்றி உள்ளன.
எனவே அவர் தூய மனதுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தி செல்வார் என்று உறுதி கூறுகிறேன். கட்சி மேம்பாட்டுக்காக நான் தொடர்ந்து உங்களுடனே இருப்பேன்.
இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.