நடிகர் சங்கத்தை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -சிம்புவுக்கு டி.ராஜேந்தர் அறிவுரை
நடிகர் சங்கத்தின் விழாக்கள், நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்விலும் சிம்பு கலந்து கொள்ளவில்லை. மேலும், நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சிம்பு. நடிகர் சங்க உறுப்பினர்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகுவதற்கான காரணத்தை தெரிவித்தார்.
சிம்புவின் விலகல் அறிவிப்புக்கு ராதிகா உள்ளிட்டோர் விலக வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
”எனது மகன் சிம்பு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியானதற்கு பின்னால், நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதிலே நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்ட போது நானும், எனது மகனும் இந்த பீப் சாங்க் விஷயத்தை சட்டரீதியாக எதிர் கொள்கிறோம் என்று சொன்னதாக சொல்லியிருந்தார்கள். அது உண்மை தான். நான் சட்டரீதியாக எதிர்கொள்கிறேன் என்று சொன்னேன், சொன்னபடியே இறைவன் அருளால் அத்தனை நீதிமன்றங்களில் ஏறி இறங்கி வழக்குகளையும், வந்த விமர்சனங்கள் அத்தனையும் சந்தித்தோம். இன்னும் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
என் மகன் சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தவுடன் என்னையும், என் மகனையும் தொடர்பு கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, எங்கள் மீது அக்கறைக்காட்டிய மூத்த நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
நம்முடைய முன்னோர்கள் மறைந்து விட்ட கலைவாணர், எம்ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா போன்ற எண்ணற்ற தென்னிந்திய கலைஞர்கள் கட்டி காத்தது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். அதை விட்டு விலக வேண்டாம், உன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே உன் தந்தை என்ற முறையில் என் கருத்து. இதற்கு மேல் உனக்கென்று தனி கொள்கை இருக்கலாம், சுயமரியாதை உணர்வு இருக்கலாம். அதை நான் மதிக்கிறேன்.
வேகத்தை விட விவேகம் தான் வெல்லும்” –
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.