‘ரஜினியும் சகாயமும் அரசியலுக்கு வரவேண்டும்’- பழ. கருப்பையா பேச்சு!
திருப்பூரில் 13–வது புத்தக திருவிழா கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக ஆக்கியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாக உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகி விட்டது.
அரசியலுக்கு வரும் போது, பதவியை பிடிக்க வேண்டும் என்று தான் வருகிறார்கள்.
லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாக மாறி விட்டது. காமராஜர் இறந்த போதே மரணம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும். நேர்மையாக நடக்கிற ஒருவன் ஒதுக்கப்படுகிறான். சட்டத்தை சார்ந்து இருக்கும் அரசியல் தோற்கும்.
ஆனால் அறத்தை தாங்கி நிற்கும் அரசியல் தோற்காது. அரசியல்வாதிகள் எதையும் மக்களுக்கு உணர்த்துவதில்லை. இதனால் மக்கள் அரசியலை வெறுக்கிறார்கள். தமிழுக்கு ஒலிக்கற்பு இருப்பதால் மொழி சிதையாமல் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் நீங்கள் எந்த கட்சியில் சேர இருக்கிறீர்கள்? என்று கேட்ட போது தேர்தலுக்கு முன்பு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் யோசித்து முடிவு செய்வேன். என் வீடு மீது நடந்த தாக்குதலில் குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டனர்.
ரஜினிகாந்த், சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை. மையப்படுத்தி ஊழல் செய்வது என்ற முறையை கண்டறிந்தது அ.தி.மு.க. தான்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.