தமிழர்களின் மனக்காயத்திற்கு மருந்து தடவுவதாக அமைந்து இருக்கிறது – கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றினை ஹரித்துவாரில், கங்கை நதிக்கரையோரத்தில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி அன்று நிறுவிட பா.ஜ.க.வின் தருண் விஜய் ஏற்பாடு செய்தபோது, அங்கேயுள்ள சாதுக்களில் ஒரு பிரிவினர் அங்கே திருவள்ளுவரின் சிலையினை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக திருவள்ளுவரின் சிலையினை கங்கைக்கரை அருகே உள்ள மாநில அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை விருந்தினர் இல்ல வளாகத்திலே தற்காலிகமாக நிறுவிட, உத்தரகாண்ட் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
உத்தரப்பிரதேச மாநில கவர்னர் ராம்நாயக், மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அந்த சிலை திறந்துவைக்கப்பட்டது. அப்போதே அங்கே கலந்து கொண்டவர்கள், அய்யன் திருவள்ளுவரின் சிலையை மரியாதைக்குரிய பொது இடத்தில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளையும் அந்த மாநில அரசு எடுத்து வந்தது.
இந்த நிலையில் தான் ஒரு சில நாளேடுகளில், ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும், திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு, பிளாஸ்டிக் பையில் வைத்து, கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அங்கே உள்ள ஒரு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டது. அதனைப் படித்த தமிழர்கள் பெரிதும் மனக்கொந்தளிப்புக்கு ஆளாக நேர்ந்தது.
சிலையை வைக்க ஏற்பாடு செய்த தருண் விஜய்யை, தொடர்பு கொண்டு இதைப் பற்றி கேட்டபோது, “ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். விரைவில் வேறு இடத்தில் முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலையை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை உத்தரகாண்ட் அரசு மதிக்கிறது” என்று தெரிவித்ததாக ஒரு நாளிதழில் செய்தி வந்துள்ளது.
இதற்கிடையே அகில இந்திய தமிழ்ச்சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரா.முகுந்தன் டெல்லியில் இருந்து ஹரித்துவாருக்கு சென்றிருப்பதாகவும், அவர்களிடம் உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திருவள்ளுவர் சிலையை அடுத்த சில நாட்களில் வேறு இடத்தில் நிறுவப்படும் என்று உறுதியளித்திருப்பதாகவும் செய்திகள் வந்திருப்பது ஆறுதலை தருகிறது.
இந்த நிலையில் தான் திருவள்ளுவர் சிலையினை நிறுவுவதில் உண்டான பிரச்சினை குறித்து கவிஞர் வைரமுத்து, கி.வீரமணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் அடுத்த சில நாட்களில் திருவள்ளுவருக்கு மரியாதையும், கவுரவமும் அளிக்கும் வகையில் அவரது சிலையை நிறுவிட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்திருப்பது ஏற்பட்ட மனக்காயத்திற்கு மருந்து தடவுவதாக அமைந்திருக்கிறது.
அதற்காக தமிழ் உணர்வு படைத்த மக்களின் சார்பில் உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இனியாவது தமிழர்களின் உணர்வுகளில் இரண்டறக்கலந்து விட்ட இந்த பிரச்சினை குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இதன் காரணமாக மேலும் எந்த விதமான குழப்பமும் ஏற்படாத வகையில் உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி உறுதி அளித்திருப்பதைப் போல உரியதோர் இடத்தில் திருவள்ளுவர் சிலை அங்கே நிறுவப்பட உலகப் பொது மறை தந்த உத்தமரைப் போற்றுதல் செய்திட முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.