பிரதமர் படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்னும் பெயரில் அதிவேக இணைய வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இதுதொடர்பாக, நாளிதழ்களில் தலைப்பு பக்கங்களில் முழுபக்க அளவில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன.
பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய அந்த விளம்பரங்களில் ‘பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை ஜியோ நனவாக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதுபோல பேடிஎம் நிறுவனமும் தனது விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தது.
இந்த விளம்பரங்கள் வெளியானதும், தனியார் நிறுவன தயாரிப்பை ஒரு நாட்டின் பிரதமர் எப்படி ஆதரிக்கலாம்? என நாடு முழுவதும் இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து விளம்பரத்தில் பிரதமரின் படத்தை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு பேடிஎம் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளன.
இந்தத் தகவலை நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி சி.ஆர்.சவுத்ரி இன்று கடிதம் வாயிலாக மாநிலங்களவையில் தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.