அன்புமணியை முதல்வராக்க வேண்டும் –பாமக மாநாட்டில் தீர்மானம்.
’’ஊழல், இயற்கை வளக்கொள்ளை, மது விற்பனை ஆட்சிகளுக்கு முடிவு கட்டி மது, ஊழலற்ற, கல்வி, சுகாதாரம் நிறைந்த மாநிலம் படைக்க பா.ம.க ஆட்சி அமைப்போம்.
தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தி, அதற்கு அடையாளமாக கை விரலில் கறுப்பு மையை தடவிக் கொள்ளும் சடங்கு அல்ல. மாறாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கான மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாகும். ஆனால், அழுது கொண்டிருக்கும் குழந்தையின் கையில் வாழைப்பழத்தைக் கொடுத்து, அதன் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்துச் செல்லும் கொள்ளைக்காரர்களைப் போலத் தான் தமிழகத்தில் தேர்தலின் போது, விரக்தியில் இருக்கும் மக்களுக்கு இலவசங்கள் என்ற வாக்குறுதியையும், ஓட்டுக்கு பணம் என்ற லஞ்சத்தையும் கொடுத்து விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான மக்களின் வாக்குகளை தி.மு.கவும், அ.தி.மு.கவும் பறித்துச் செல்கின்றன. ஒரு கட்சியின் ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டால் இன்னொரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவது, அந்த ஆட்சியும் மோசமானால் ஏற்கனவே ஆண்ட கட்சியிடமே மீண்டும் ஆட்சியை கொடுப்பது என்ற ‘எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி’ விளையாட்டு தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட முடியாது. வளமையும், செழுமையும் நிறைந்த தமிழகத்தை வறட்சியும், வறுமையும் நிறைந்த மாநிலமாக மாற்றிய பெரும் பாவம் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகளையே சாரும்!
அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைத்து வந்த தரமான கல்வியை வணிகமயமாக்கி கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்தது, மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்தது, இளம் விதவைகளை உருவாக்கியது, உழைக்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் மழுங்கடித்தது, வேளாண் தொழிலை சீரழித்து விவசாயிகளை கடனாளிகளாக்கி தற்கொலைக்கு தூண்டியது, கிரானைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிக்க துணை போனது, தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்காதது, பாசனப் பரப்புகளை பெருக்காதது என திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகள் ஏராளமானவை… எண்ணி லடங்காதவை.
இந்த சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டியது தான் தமிழ்நாட்டு மக்களின் தலையாய கடமை ஆகும். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான செயல்திட் டங்களையும், மது, ஊழலற்ற, கல்வி, சுகாதாரம் நிறைந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் பா.ம.க. வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த செயல்திட்டங்களை செயல்படுத்தும் திறன் கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக பா.ம.க. அறிவித்திருக்கிறது. இவ்வாறாக, தமிழகத்தை பீடித்துள்ள மது, ஊழல், பொருளாதார பின்னடைவு, கடன் உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் அகற்றி வளர்ச்சிப் பாதையில் வழி நடத்திச் செல்ல பா.ம.க.வால் மட்டுமே முடியும். எனவே, தமிழ்நாட்டின் ஏழரை கோடி மக்களின் நன்மைக்காக வரும் தேர்தலில் 5.79 கோடி வாக்காளர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாசை முதலமைச்சராக்க வேண்டும் என்ற சரியான முடிவை எடுக்கும்படி தமிழக மக்களை பா.ம.க. மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.’’
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.