Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

RK Nagar election result will lead to Gen. election results: So, work hard –Stalin tells party workers.

By   /  December 7, 2017  /  Comments Off on RK Nagar election result will lead to Gen. election results: So, work hard –Stalin tells party workers.

    Print       Email

ஆட்சி மாற்ற முன்னோட்டம் ஆர்.கே.நகரில் அமைய சோர்வின்றி பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

 

Suvidha
Biryani Pot

 

 

ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் ஆர்.கே.நகரில் தொடங்குகிறது என்கிற வகையில், வெற்றியைக் குவிக்கும் வீரர்களாக பணியாற்றுங்கள் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று திமுக தொண்டர்களுக்குன் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ”சவால் நிறைந்த களங்களை முண்டா தட்டி வரவேற்கும் மனதிடம் கொண்ட இயக்கம் திமுக. இடைத்தேர்தல்களும் அப்படிப்பட்டவைதான். ஆளுங்கட்சியினரின் அதிகார அத்துமீறல்கள், அதற்கு மறைமுக ஆதரவு தரும் மத்திய அரசின் செயல்பாடுகள், தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் தயக்கம் இவற்றிற்கு நடுவே மீண்டும் விறுவிறுப்பு அடைந்திருக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவெய்தியதால் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்.கே.நகர் தொகுதி. ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இத்தனை நாட்களாக அவருடைய தொகுதி காலியாக இருப்பதற்கான காரணத்தை நாடறியும். கடந்த முறை அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல், ஆளுங்கட்சியினரின் வகைதொகையில்லா பணப் பட்டுவாடாவால் நிறுத்தப்பட்டது. அது தொடர்பான சோதனைகளில், அமைச்சரின் வீட்டிலிருந்தே பண விநியோகம் பற்றிய பட்டியல் கைப்பற்றப்பட்டது. அதில் முதல்வரில் தொடங்கி பல அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு, ஆளும் தரப்பு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் எத்தகைய நிலைய மேற்கொண்டன என்பதை தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு நினைவூட்டிடத்தான் இதைக் குறிப்பிட்டேன். இத்தகைய சூழலில், திமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபித்திட தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் களப்பணி அவசியமானது.

இடைத்தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்ட உடனேயே திமுகவின் பணிகள் தொடங்கிவிட்டன. ஆர்.கே.நகர் தொகுதியின் மண்ணின் மைந்தரும், முன்பே அறிவிக்கப்பட்ட வேட்பாளருமான சகோதரர் மருதுகணேஷுக்கே அந்த வாய்ப்பை வழங்கி, அவர் வேட்புமனுவையும் தாக்கல் செய்து, தேனீயின் சுறுசுறுப்புடன் தொகுதி முழுவதும் வலம் வந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுகவுடன் கூட்டணி கண்டுள்ள காங்கிரஸ் பேரியக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அரசியல் இயக்கங்கள் முழுமையாகத் தங்களின் ஆதரவை வழங்கி திமுக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுகின்றன. மத்தியில் உள்ள ஆட்சியும்-மாநிலத்தில் செயலற்ற ஆட்சியும் அகற்றப்படவேண்டும் என்கிற மக்கள் விருப்பத்தை உணர்ந்த தோழமை சக்திகளும் நம்முடன் தொடர்ந்து இணைந்து நிற்கின்றன.

திமுகவின் அழைப்புக்கு தொடர்ந்து மரியாதை தரும் வகையில், அகில இந்தியத் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தியாவையே தமிழகம் நோக்கித் திருப்பிய தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்வு, தமிழகத் தலைவர்களின் பங்கேற்புடன் சிறப்புற நடந்த முரசொலி பவளவிழா நிகழ்வு, நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள், விவசாயிகளின் உரிமை காக்கும் போராட்டங்கள் என அனைத்திலும் நம்முடன் கரம் கோத்த தோழமை சக்திகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இயக்கங்களும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து களத்தில் இறங்கியிருப்பது உத்வேகத்தை அளிக்கிறது.

அதுபோலவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனப்படும் சி.பி.எம் இயக்கமும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என அறிவித்திருப்பதையும் வரவேற்கிறேன். மதிமுகவின் நிர்வாகக் குழு கூடி, ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கே ஆதரவு எனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் வரவேற்று மகிழ்கிறேன்.

தமிழக மக்கள் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையே வலிமை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் டிசம்பர் 11-ம் நாள் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவுமும் தோழமை கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் நின்று பரப்புரையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான இந்தத் தொடக்கம், இடைத்தேர்தலில் திமுக பெறவிருக்கும் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறும். அந்த வெற்றிக்கான வியூகத்தையும் களப்பணியையும் மேற்கொள்ள வேண்டியது திமுக உடன்பிறப்புகளின் கடமையாகும்.

நம்முடைய பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குட்பட்டே நடைபெறும். வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பது, தெருமுனை பிரச்சாரம் தொடங்கி பேரணி-பொதுக்கூட்டம் வரையிலான பரப்புரைகளை மேற்கொள்வது, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகங்களை கண்கொத்தி பாம்பாக இருந்து கண்டறிந்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவது, வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்கக் கோருவது, எந்த ஒரு வாக்கும் விலைபோகாமல் ஜனநாயக முறைப்படி பதிவாக துணை நிற்பது என ஏராளமான பணிகள் இருக்கின்றன.

இரண்டாண்டு காலத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் ஜெயலலிதாவும், அவரைச் சார்ந்தவர்களும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைதண்டனை பெற்று, முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் ‘கணக்கீட்டினால்’ விடுதலை பெற்ற போது 2015-ம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதி மீது இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது.

முதல்வரின் தொகுதி என்ற பெருமை மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கிடைத்ததே தவிர, ஒரு சராசரி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதிக்குரிய அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பெயரளவுக்கு அவசர அவசரமாக அரைகுறைப்பணிகளே நிறைவேற்றப்பட்டன. இன்றளவும் ஆர்.கே.நகரில் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை. கழிவுநீர் குட்டைகளாக பல தெருக்கள் உள்ளன. சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்து சீரழிந்து கிடப்பதால் போக்குவரத்து நெருக்கடியும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எந்த முன்னேற்றமும் காணாத முன்னாள் முதல்வரின் தொகுதியை ‘மாதிரி தொகுதி’யாகக் காட்டி, மக்களை ஏமாற்ற நினைக்கும் குதிரைபேர அதிமுக ஆட்சியாளர்களின் தகிடுதத்தத்தை நம்பிட வாக்காளர்கள் தயாராக இல்லை.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உழைக்கும் திமுக வேட்பாளருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது. மக்களிடம் வரவேற்பு பெருகுகிறது. களத்தில் பல்வேறு தரப்பினர் நின்றாலும், கோடி நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் ஒரே நொடியில் தன் வெளிச்சத்தால் விழுங்கிவிடும் சூரியனைப் போல திமுகவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் திமுகவின் வெற்றியை எவராலும் தடுத்துவிடமுடியாது என்பதை இடைத்தேர்தல் களத்திலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த உறுதியைக் குலைத்திடும் வகையில் மாநிலத்தில் ஆள்வோரும் மத்தியில் ஆள்வோரும் பலவிதங்களிலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முனைவார்கள். அந்த அதிகார அம்புகளின் முனை முறிந்திடும் வகையில், ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்றும் அனைத்துத் தரப்பினரும் முனைப்புடன் இயங்கிட வேண்டும். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, சிறுபான்மை நலப்பிரிவு, வர்த்தகர் அணி, ஆதிதிராவிட நலப்பிரிவு, இலக்கிய அணி உள்ளிட்ட கழகத்தின் துணை அமைப்பினர் அனைவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து வெற்றி வியூகத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் செயலாற்றிட வேண்டும்.

மலை போல பணிகள் குவிந்துள்ளன. அவற்றை உமி போல ஊதித் தள்ளும் ஆற்றல் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உண்டு. இமைப்பொழுதுகூட சோர்வு ஏற்படாத வகையில் வாக்குப்பதிவு நாள் வரை பணியாற்றி, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி, திமுக வெற்றி மூலம் புதிய வரலாறு படைத்திட உடன்பிறப்புகளின் உழைப்பும் ஒத்துழைப்பும் அவசியம். ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் ஆர்.கே.நகரில் தொடங்குகிறது என்கிற வகையில், வெற்றியைக் குவிக்கும் வீரர்களாக தோழமை கட்சியினர் ஒத்துழைப்போடு களமிறங்கிப் பணியாற்றுங்கள்.

நாம் கருணாநிதியின் உடன்பிறப்புகள் என்பதை ஓய்வறியா உழைப்பால் நிரூபிப்போம். இடைத்தேர்தல் வெற்றி மாலையை தலைவர் கருணாநிதியின் தோள்களில் சூட்டி மகிழ்வோம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Birthday wishes to legend Ghantasala

Read More →