சேலத்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட ரூ 5 கோடி பணம் கொள்ளை; விஜயகாந்த் கண்டனம்.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8-ம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது.அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொள்ளையர்கள் திட்டம் போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். சாதாரண கொள்ளையர்களால் இதுபோன்று செய்ய முடியாது. பல கொள்ளைகளில் ஈடுபட்டவர்களால் மட்டுமே இப்படி துணிந்து செய்ய முடியும். எனவே, வட மாநில கொள்ளையர்கள் இங்குள்ளவர்களின் துணையுடன் கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
‘இந்தப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பதாக’ தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சேலத்திலிருந்து இருந்து ரயிலில் ரிசர்வ் வங்கி பணம் சென்னைக்கு கொண்டுவரும்போது , சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில், ஓடும் ரயிலில், மேற்கூரையை வெட்டி எடுத்து கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவம் இதுவரை தமிழகத்தில் நடைபெற்றதில்லை. குற்றம் குறித்து எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், மிகப்பெரிய சதியோடி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ரயில் நடைபெற்றுள்ளை கொள்ளை, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வேறு மாநிலத்தவரை அதிகமாக தமிழகத்தில் வேலையில் அமர்த்துவது, அவர்களை உரிய முறையில் கண்காணிக்காதது போன்ற காரணங்களால், இந்த ரயில் கொள்ளை நடைபெற்றிருக்கலாம். இந்த சம்பவம், தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.