பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தான் சாம்பியன்: கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் – பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகிறது.
இந்த மோதல்கள் சமீப காலமாக படுகொலையில் முடிவதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது.
படுகொலை தொடர்பாக ஆளும் மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநில அரசின் மீது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்நாள் சட்டசபை அமளிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பினராயி, “பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தான் சாம்பியன். அதனை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள். கேரள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி நன்றாக தெரியும். அவர்களது பொய் பிரச்சாரத்தால் எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை” என்றார்.
படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி திருவனந்தபுரம் வந்து சென்ற பிறகு பினராயி விஜயன் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.