சாய் பிரசாந்த் தற்கொலை; டிவி நிறுவனங்களுக்கு ராதிகா வேண்டுகோள்.
சாய் பிரசாந்த் தற்கொலையை முன்னிறுத்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ராதிகா சரத்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது தெருவில் வசித்தவர் நடிகர் சாய் பிரசாந்த் (30). நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ‘இளவரசி’, ‘அண்ணாமலை’, ‘அரசி’, ‘செல்வி’ உட்பட பல சின்னத்திரை மெகா தொடர்களிலும், ‘நேரம்’, ‘தெகிடி’, ‘வடகறி’, ‘ஐந்தாம்படை’ உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சாய் பிரசாந்த்தின் தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து ராதிகா சரத்குமாரிடம் கேட்டபோது “சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது.
ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, ஷோவிற்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது.
இந்த மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்கள் கையெழுத்து வாங்கி கொள்வதால் நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள். சின்னத்திரை என்பது ரொம்ப சின்ன இடம் என்பதால் மிகவும் பொருளாதார சிக்கல் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படுகிறது. நானே நிறைய இடங்களில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ மற்ற நிறுவங்களின் நாடகங்களில் நடிக்கப் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லியிருக்கிறேன். அதை தடுக்கக் கூடாது என்று நான் நிறைய சண்டையிட்டு இருக்கிறேன். திறமையுள்ள நடிகன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
சமுத்திரக்கனி தான் என்னுடைய ‘அரசி’ நாடகத்தில் சாயை அறிமுகப்படுத்தினார். என்னைப் பார்க்க நிறைய முறை அலுவலகத்திற்கு வருவான். எனக்கு நன்றி சொல்லியிருப்பதாக சொன்னார்கள், அதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தால் மற்றொரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடிக்க நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று ராதிகா சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.