மியாமி டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி முதல் சுற்றில் வெற்றி .
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-6 (2), 6-3 என்ற நேர் செட்டில் பிரான்செஸ் டியாபோவை (அமெரிக்கா) தோற்கடித்தார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் பெடரர் இந்த ஆண்டில் 15 ஆட்டங்களில் விளையாடி அதில் 14-ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பெடரர் 3-வது சுற்றில் அபாயகரமான வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை சந்திக்கிறார்.
மற்றொரு சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) விரட்டினார். ஜான் இஸ்னர் (அமெரிக்கா), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), சாம் குயரி (அமெரிக்கா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.
இதற்கிடையே 3-வது சுற்றில் ஆட இருந்த கனடாவின் நட்சத்திர வீரர் மிலோஸ் ராவ்னிக் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 6-வது இடம் வகிப்பவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), சீனாவின் ஷூய் ஜாங்கை எதிர்கொண்டார். 2 மணி 4 நிமிடங்கள் போராடிய முகுருஜா 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றை எட்டினார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் சோரனா கிர்ஸ்டியாவை (ருமேனியா) வீழ்த்தினார். 4-வது சுற்றில் முகுருஜா- வோஸ்னியாக்கி பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள்.
குரோஷியாவின் மிர்ஜனா லூசிச் பரோனி, தன்னை எதிர்த்து மல்லுகட்டிய 8-ம் நிலை வீராங்கனை போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவுக்கு 6-0, 6-3 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி அளித்தார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சிபுல்கோவா (சுலோவக்கியா), பெதானி மாடக் சான்ட்ஸ் (அமெரிக்கா), லூசி சபரோவா (செக்குடியரசு) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இதன் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் டெமி ஸ்கர்ஸ் (நெதர்லாந்து)- ரெனட்டா வோரகோவா (செக்குடியரசு) இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. சானியா ஜோடிக்கு வெற்றியை உறுதி செய்ய 1 மணி 21 நிமிடங்கள் தேவைப்பட்டது. சானியா கூட்டணி அடுத்து டைமியா பாபோஸ் (ஹங்கேரி)- அனஸ்டசியா பாப்லிசென்கோவா (ரஷியா) ஜோடியுடன் மோத இருக்கிறது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.