திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா எம்.பி. விளக்கக் கடிதம் அளித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா புஷ்பா நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, நேற்று பிற்பகல் போயஸ் தோட்டத்துக்கு சென்ற சசிகலா புஷ்பா, நடந்த சம்பவம் தொடர்பாக கட்சித் தலைமையிடம் விளக்கக் கடிதம் அளித்துவிட்டு சென்றுள்ளார். அப்போது மக்களவை துணைத் தலைவரும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரையும் உடனிருந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டப்பேரவை பொதுத் தேர் தலுக்கு முன்பு அதிமுக மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி சிவா எம்.பி.யுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அது மார்பிங் செய்யப்பட்ட படம் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண் நண்பருடன் சசிகலா புஷ்பா பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சசிகலா புஷ்பா மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் பலர் முன்னிலையில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நடந்ததுமே முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, உடனடியாக மற்றவர்களிடம் இதுபற்றி விசாரித்து அறிந்தார். இந்நிலையில், சசிகலா புஷ்பாவை போயஸ் கார்டனுக்கு அழைத்து விளக்கம் கேட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.