அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் குடும்பம் நீக்கம்: முதல்வர்-அமைச்சர்கள் அதிரடி முடிவு
அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் குடும்பம் நீக்கம்: முதல்வர்-அமைச்சர்கள் அதிரடி முடிவு
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த இரண்டு அணிகளையும் இணைத்து இரட்டை இலை சின்னத்தை ஒன்றுபட்டு பெற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதுதொடர்பாக இரு தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதேசமயம், அமைச்சர்கள் திடீரென தனியாக ஆலோசனை நடத்தினர். இன்று பெங்களூரில் இருந்து திரும்பிய டி.டி.வி.தினகரன் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவர்கள் சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர், வெளியில் வந்த அமைச்சர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஜெயக்குமார் கூறியதாவது:-
கட்சியின் எதிர்காலம் குறித்தும், ஆட்சியை தொடர்ந்து நடத்துவது குறித்தும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினோம். அது என்னவென்றால், கட்சியின் ஒட்டுமொத்த கருத்து, தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பமும், மக்களின் ஒட்டுமொத்த விருப்பமும் என்னவென்றால், கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
வெளிப்படையாக சொல்வதென்றால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைத்து விட்டு கட் சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் விருப்பம். தலைமை நிர்வாகிகள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் விருப்பமும் அதுதான்.
எனவே, அந்த விருப்பத்தின் அடிப்படையில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு எள்ளளவும் அவர்களின் தலையீடு இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவோம் என்ற அளவுக்கு விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மக்களுக்கு இப்போது தெரியப்படுத்துகிறோம். இதன்மூலம்
மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியை வழிநடத்துவதற்கு இப்போதைக்கு ஒரு குழு அமைக்கப்படும். அதில் யார் இடம்பெறுவார்கள்? என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்களுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அதனை ஏற்றுக்கொள்வோம். அவரும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.