அதிமுக பொதுச்செயலாளராய் சசிகலா நியமனம் செய்யப்பட்ட விவகாரம் ; தேர்தல் கமிஷன் தலையிட முடியுமா? சட்ட நிபுணர்கள் கருத்து.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட பின்பு அ.தி.மு.க.வில் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி தேர்தல் கமிஷனில் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். அதில் அ.தி.மு.கவில் தற்காலிக பொதுசெயலாளரை தேர்வு செய்ய கட்சி விதியில் இடம் இல்லை எனவே அவரது தேர்வை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு சசிகலா சார்பில் அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை. அவரது நியமனம் சரியானதுதான். முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இருதரப்பினர் மனுக்கள் மீதும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகிறார்கள். விரைவில் தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கமிஷன் அறிவிப்பின் போது சசிகலா பதவி தப்புமா என்பது தெரியவரும்.
அவரது நியமனம் செல்லாது என்று அறிவித்தால் சசிகலாவால் அறிவிக்கப்பட்ட நீக்கமும், நியமனமும் செல்லாதது ஆகிவிடும் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் இது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அ.தி.மு.க எம்.பியும் வக்கீலுமான நவநீதகிருஷ்ணன் கூறுகையில், சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது உள்கட்சி விவகாரம். இதில் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ தலையிட முடியாது. உள்கட்சி தேர்தல் நடந்தது குறித்து மட்டுமே தேர்தல் கமிஷன் கேட்க முடியும்.வேறு எந்த விஷயத்திலும் தலையிட முடியாது. சசிகலா பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட போது ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் முன் மொழிந்தனர். எனவே அனைவரின் ஒப்புதலுடன் தான் அவர் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அது செல்லும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு கூறியதாவது:-
தேர்தல் கமிஷன் என்பது கட்சிகளின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் அமைப்பு கிடை யாது. கட்சி தேர்தல், பொதுக்குழு மற்றும் கணக்குகள் தாக்கல் ஆகியவற்றை மட்டுமே கேள்வி கேட்கும். மற்றபடி கட்சி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டநிபுணர் சுபாஷ் சி. காஷ்யப் கூறும் போது, இந்த பிரச்சினைக்கு தேர்தல் கமிஷன் மூலம் தீர்வு காண முடியாது, சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டை அணுகினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.