நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு.
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சிக்கு ‘‘இரட்டை மெழுகுவர்த்தி’’ சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.
இதனை சீமான் இன்று அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எங்களது கட்சிக்கு ‘இரட்டை மெழுகு வர்த்தி’ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மெழுகுவர்த்தி தன்னையே வருத்திக் கொண்டு வெளிச்சத்தை கொடுக்கும். அதனை போன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் வென்று தங்களை வருத்திக் கொண்டு மக்கள் பணியாற்றுவார்கள்.
தியாகத்தின் குறியீடாகவும் மெழுகுவர்த்தியை பார்க்கிறோம். அந்த அடிப்படையில் நாங்களும் பணியாற்றுவோம். தமிழகத்தின் ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் கொண்டு வருவதே எங்கள் இலக்கு.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து செயற்கை மதுவை ஒழிப்போம். பனம்பாலும், தென்னம்பாலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். உடலுக்கு உகந்த, கேடு விளைவிக்காத ஆரோக்கிய பானங்கள் அவை.
இதே போல் தமிழகத்தின் வளங்கள் பல ஆண்டுகளாக சுரண்டப்பட்டு கொண்டே இருக்கின்றன. அவைகளை தடுத்து நிறுத்தி வளங்களை பெருக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
குறிப்பாக வளம் சார்ந்த தொழிற்சாலை அனைத்து இடங்களிலும் நிறுவப்படும். விவசாயம் செய்வதிலும், ஆடு, மாடுகளை மேய்ப்பதும் அரசு பணியாக்கப்படும். பண்ணை நிலங்களை அதிகம் உருவாக்கி ஆடு, மாடுகளை வளர்த்து இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் தொழில் அதிபர்களை தமிழகத்துக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக முதலீடு ஈர்க்கப்பட்டு தொழிற்சாலைகள் தொடங்கப்படும். அனைத்து துறை சார்ந்த தொழில்கள் மேம்பட பாடுபடுவோம்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் இழுத்து மூடப்படும். அகதி என்ற சொல்லே இல்லாத நிலை உருவாக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும். அவர்கள் விரும்பும் வரை இங்கே தங்கி இருக்கலாம். தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்க்க முடியாத நிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து நான் முதலமைச்சர் ஆனால் அதற்கு அதிரடியாக முடிவு கட்டப்படும்.
சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தால் இங்குள்ள சிங்களர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர். தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான் சிங்களர்கள் விடுவிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகள் அனைத்தும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி இருப்பதாக அக்கூட்டணி தலைவர்கள் கூறுகிறார்களே என்று சீமானிடம் கேட்ட போது, ‘‘தேர்தல் களத்தல் எல்லோருமே கடை விரித்துள்ளனர். அதில் நல்ல சரக்கு எங்கிருக்கிறது என்று மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் நிச்சயமாக மாற்றாக இருப்போம்’’ என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.