தமிழக சட்டசபைக்கு வேட்பாளர் தேர்வு; ராகுலின் புதிய முறைக்கு கட்சியினரிடம் எதிர்ப்பு.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்பது முடிவாகாத நிலையில் காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தமிழக காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பதால் ஒவ்வொரு கோஷ்டியினரும் சத்திய மூர்த்தி பவனில் தனித்தனியாக மனுக்களை பெற்றனர்.
வழக்கமாக தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும். இறுதியில் மேலிடம் பரிசீலனை செய்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தங்கள் ஆதரவாளர்களுக்கு டிக்கெட் பெற்றுத்தர கோஷ்டி தலைவர்கள் டெல்லிக்கு படையெடுப்பார்கள். தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மேலிட தலைவர்களை சந்தித்து டிக்கெட் வழங்க சிபாரிசு செய்வார்கள்.
இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் கோஷ்டி பூசல் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க இந்த தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் புதிய முறையை கடைப்பிடிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டார்.
மாநில தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு நடைபெறுவதற்கு பதிலாக அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்றும் மாவட்ட தலைவர்களே நேர்காணலை நடத்தி வேட்பாளரை தேர்வு செய்வார்கள். இதில் மேலிட பார்வையாளராக ஒருவர் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்களே வேட்பாளர் நேர்காணலை நடத்தினார்கள்.
ராகுல் காந்தியின் இந்த புதிய உத்தரவால் தமிழக காங்கிரசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் மூத்த நிர்வாகிகள் பலர் மாவட்ட அலுவலகத்துக்கு சென்று மாவட்ட தலைவர் முன் அமர்ந்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதா? என்று தயங்குகிறார்கள்.
இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ராகுல் காந்தியின் இந்த புதிய முறையால் காங்கிரசார் இடையே குழப்பம் நிலவுகிறது. சென்னையில் ஏன் விருப்ப மனுக்களை பெற்றார்கள்? சென்னையில் நேர்காணல் நடந்தால் தான் அது ஒழுங்கானதாக இருக்கும். இந்த புதிய முறையானது காங்கிரசாரிடையே தேர்தலில் அலட்சிய போக்கை உருவாக்கிவிடும். எனவே பழைய முறையே நீடிக்க வேண்டும்’’ என்றார்.
மற்றொரு நிர்வாகி கூறுகையில், “காங்கிரசில் ஒவ்வொரு கோஷ்டியினரும் சீட் கேட்டு மோதிக் கொள்வதை தவிர்க்க இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் ஒரே கோஷ்டியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். யார் மாநில தலைவராக நியமிக்கப்படுகிறாரோ, அவர் தான் மாவட்ட தலைவர்களையும் மாற்றி அமைக்கிறார்.
தனது ஆதரவாளர்களை மட்டுமே மாவட்ட தலைவராக நியமிக்கிறார். மற்ற கோஷ்டியினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே மாநில தலைவரின் ஆதரவாளரே மாவட்ட தலைவராக இருக்கும் போது வேட்பாளர் தேர்வு எப்படி நடுநிலையாக இருக்கும். இது மேலும் கோஷ்டி பூசலை ஏற்படுத்தும்” என்றார்.
இறுதியாக வேட்பாளர் பட்டியலை மாவட்ட தலைவர் தயாரிப்பாரா? அல்லது மாநில தலைமை பரிந்துரை செய்யுமா என்பதும் குழப்பமாக இருப்ப தாக காங்கிரசார் அதிருப்தி தெரிவித்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.