கலைஞர் கருணாநிதியுடன் நடிகர் சிவகுமார் சந்திப்பு.
முன்னாள் முதல்வரும் திமுகழகத் தலைவருமான கலைஞர் கருணாநிதியை நடிகர் சிவகுமார் சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்ச்சி பூர்வமாக இருந்தது. இதுபற்றி நடிகர் சிவகுமார் கூறியதாவது; “கலைஞர் கருணாநிதி சென்ற வருடம் உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்திலேயே சென்று சந்தித்து வந்தேன். அதன் பிறகு அவர் வீட்டிற்குத் திரும்பி ஓய்விலிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பிறகு ஓரிரு சமயம் சந்திக்க முயன்றேன். இயலவில்லை.
சமீபத்தில் தமிழருவி மணியன் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய நூலை வெளியிட்டுப் பேசும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரிட்டது. அப்படி வெளியிட்டுப் பேசியபோது கலைஞர் எழுதி நடிகர் திலகம் பேசிய வசனங்களைக் கூட்டத்தில் பேசிக் காட்டினேன். அந்த வசனங்களைப் பேசிக்காட்டிய போது எழுந்த கைத்தட்டலால் மண்டபமே அதிர்ந்தது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் அதற்குக் காரணமான அந்த மனிதரைக் கண்டிப்பாக சந்தித்துவிட வேண்டும் என்ற உணர்வு மீண்டும் என் உள்ளத்தில் எழுந்தது.
கலைஞர் வீட்டிற்கு போன் செய்து அவரது மகள் திருமதி செல்வியிடம் பேசினேன். “பொதுவாக யாரையும் சந்திக்க அனுமதி தருவதில்லை. ஆனா நீங்க வாங்கண்ணா” என்றார். கூடவே “யாரையும் கூட்டி வரவேண்டாம். நீங்க மட்டும் தனியாக வாங்க” என்றார்கள். அதன்படி அன்றைக்கு இரவு எட்டு மணிக்குப் போனேன்.
மகள் செல்வி, மகன் தமிழரசு, உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் கலைஞருடன் இருந்தனர். என்னை செல்வி அறிமுகப்படுத்தி பெயரைச் சொல்லியதும் புரிந்துகொண்டு சிரித்தார்.
அவரது வசனங்களைக் கூட்டத்தில் பேசிய ஒலிநாடாக்களைக் கொண்டு சென்றிருந்தேன். அவற்றை டிவியில் போட்டுக் காட்டியபோது மனோகரா படத்தின் வசனம் பேசி முடித்ததும் உணர்ச்சி மிகுதியில் அவரது கண்களில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் முத்துக்கள் கசிந்து விழுந்தன. எனக்கு இந்த ஜென்மத்திற்கு இதுவே போதும் என்பதுபோல் இருந்தது” – இவ்வாறு தான் கலைஞரைச் சந்தித்து வந்த அனுபவத்தை உணர்ச்சியுடன் விவரித்தார் சிவகுமார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.