பாஜகவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பிரச்சாரம். ‘தாமரைக்கு ஓட்டுப்போடுங்கள் லட்சுமி உங்கள் வீட்டிற்கு வரும்’.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று விருகம்பாக்கம் மார்க்கெட் அருகே பிரசார கூட்டம் வாயிலாக வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் அமைந்துள்ள தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது ஒரு முறையற்ற கூட்டணி. மக்களுக்கு ‘2ஜி’ யை தான் இந்த கூட்டணி நினைவுப்படுத்துகிறது.
தி.மு.க.வின் சின்னம் சன்-ரைஸ்(உதயசூரியன்). சன் என்றால் மகன். இனி எந்த மகன் உதிக்க போகிறான் என்றநிலையில் அவர்கள் கட்சி இருக்கிறது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தகுதிகள் ஒரு குடும்பத்தினராலே அபகரிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மக்கள் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது பல சலுகைகளை கொடுத்து வாக்குகள் கேட்கிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால், அதில் 10 பைசா தான் மக்களை போய் சேரும். ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் மானியங்கள் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படுவதால் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் நல்ல பில்டர் காபி குடிப்பதற்கு ரூ.30 செலவாகிறது. ஆனால் நரேந்திர மோடி கொண்டு வந்த விபத்து காப்பீடுக்கு மாதம் ரூ.1 தான் செலவாகிறது.
இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது.
நரேந்திர மோடி கிராம பஞ்சாயத்து வளர்ச்சிக்கு ரூ.80 லட்சமும், மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ.21 கோடியும் கொடுக்கிறார். எனவே மாநகராட்சி வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு உள்ளது.
விருகம்பாக்கம் தொகுதியில் பல நோய்கள் ஆக்கிரமித்து இருக்கிறது. நோய்களுக்கு தீர்வு காண டாக்டரை(தமிழிசை சவுந்தரராஜன்) வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தி உள்ளது.
காலையில் எழுந்தவுடன் தலைவணங்கும் லட்சுமி தெய்வம் கையை(காங்கிரஸ் கட்சியின் சின்னம்) பிடித்து வருவதில்லை. உதயசூரியனுடன்(தி.மு.க. சின்னம்) இல்லை. இரட்டை விரலை(அ.தி.மு.க. சின்னம்) காட்டுவதில்லை. தாமரை மலர்(பா.ஜனதா சின்னம்) மீது தான் லட்சுமி தெய்வம் அமர்ந்து இருக்கிறது.
செல்வம், முன்னேற்றம் என்றால் லட்சுமி. எனவே லட்சுமிகரமாக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஓட்டு போட்டால் செல்வமும், முன்னேற்றமும் உங்களை தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.