என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? ஹெலிகாப்டர் ஊழல் குற்றச்சாட்டுக்கு சோனியா திட்டவட்ட மறுப்பு.
அகஸ்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பொய், என்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் இன்று காலை பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணிய சாமி, இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நேரடியாக குற்றம்சாட்டினார்.
இதற்கு ஆதாரமாக, இந்திய அரசுக்கு ஹெலிகாப்டர்களை வாங்கித்தரும் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் இத்தாலி ஐகோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் பாராளுமன்ற மேல்சபை பிற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனியா காந்தி, ஹெலிகாப்டர் ஊழலில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பொய், என்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே? என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
’எங்கள் கட்சியினர் மீதும் என்னை குறிவைத்தும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் அவற்றை கண்டு நான் பயப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே தவறானவை. தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். அந்த ஆதாரங்கள் எங்கே?. எங்கள் நன்மதிப்பை சீர்குலைக்கும் பாணியை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும்.
இந்த அரசு இரண்டாண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டுள்ளனர்?, இன்னும், ஏன் விசாரணையை விரைவுப்படுத்தி முடிக்கவில்லை?, பாரபட்சம் இல்லாமல் உடனடியாக விசாரணையை நடத்தி முடிக்கட்டும்’ என்று அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.