சோனியா காந்தி மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினார். முழு ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை.
உடல்நலக் குறைவால் டெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி தனது பிரச்சாரத்தை துவக்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவால் தனது சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்தார்.
வாரணாசியில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பிய சோனியா காந்தி முதலில் ராணுவ ஆஸ்பத்திரியிலும், பின்னர் ஸ்ரீ கங்கா ராம் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் பலவீனத்துக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த காயத்துக்காகவும் இங்கு கடந்த பத்துநாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சோனியா காந்தி இன்று காலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஸ்ரீ கங்கா ராம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருக்கும் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ள டாக்டர்கள், தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்படியும், அடுத்தவாரம் மருத்துவ மீளாய்வுக்காக மீண்டும் மருத்துவமனைக்கு வந்து செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.