இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய தென் கொரியா முடிவு
இந்திய மாம்பழங்களில் அதிக அளவில் ரசாயனம் இருப்பதாக எழுந்த சர்ச்சையால் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு, அந்த தடை நீக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்யும் போது அவற்றில் உள்ள ரசாயன அளவு குறித்த உத்தரவாதச் சான்றிதழையும் சேர்த்து வழங்க வேண்டும் என இந்தியாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்திய மாம்பழங்களில் உள்ள ரசாயனம் குறித்த சர்ச்சைகள் இருதரப்பிலும் முடிவுக்கு வந்துள்ளதால் தென் கொரியா மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கான கொரிய தூதர் ஹியுன் சோ இந்த தகவலை உறுதிபடுத்தியிருக்கிறார்.
அதன்படி, கொரியாவின் தாவர தர ஆய்வு ஏஜென்ஸி இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக பரிசோதித்து சான்று வழங்கும். அதன் பிறகே, ஏற்றுமதி செய்யப்படும்.
மேற்கு ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் 41 ஆயிரம் டன்கள் அளவுக்கு பல்வேறு வகையான மாம்பழங்களை ஏற்றுமதி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
–அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.