குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள்; 36 பேர் விடுதலை. சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.
குஜராத் 2002 கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டி பகுதிக்குள் 69 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடந்த சம்பவம் திட்டமிட்ட சதி அல்ல என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் இருந்து 34 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் (ஜூன்) 6-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில், 9 பேர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
2009-ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த வழக்கில் 338 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வந்தது. மே 31-ம் தேதி தீர்ப்பு வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், குஜராத் வன்முறை தொடர்பாக நடைபெறும் 9 வழக்குகளில் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் 8 மாதங்களுக்கு முன் விசாரணை முடிவுக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று வாதிட்டார்.
ஆனால், திட்டமிட்ட சதி என்பதை மறுத்த குற்றம்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர், காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரி, கும்பல் மீது சில முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஆத்திரமுற்று வன்முறை நிகழ்ந்ததாக வாதிட்டார். இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் தீர்ப்பு வழங்கினார். 24 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 34 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிபின் படேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் எர்டா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிபின் படேல் தற்போது மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். 2002-ல் படுகொலை நிகழ்ந்தபோதும் அவர் கவுன்சிலராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 69 பேரை படுகொலை செய்தது. இதில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொலை செய்யப்பட்டார்.
இந்தத் தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்த ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி “இந்தத் தீர்ப்பை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நடந்த படுகொலைகளை நான் நேரில் பார்த்தவள். அந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். சரியான தீர்ப்புக்காக நான் தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.