இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராக வருவார் –கருணாநிதி பேட்டி.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 13-வது முறையாகவும், திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடும் கருணாநிதி, தஞ்சை திலகர் திடலில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது:-
என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளாடு வாழ வேண்டும். தமிழர்களை காப்பாற்ற, நம்மை விட்டால் யாரும் இல்லை.
வேறு யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள். நாம்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எனவே எந்த தியாகத்துக்கும் தயாராகுங்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது. நாம் எதற்கும் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்ற வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியலில் பணியாற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஓய்வு ஒன்று தான் நான் பட்டபாட்டுக்கு, நான் உழைத்த உழைப்புக்கு, நான் அடைந்த பயன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கும் கொள்கை, உணர்ச்சி, வேகத்தை.
தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே உங்களை கேட்டுக்கொள்வது தியாகத்துக்கு தயாராக இருங்கள். எதற்கும் நாம் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகத்துக்கு தற்போது பேட்டியளித்துள்ள கருணாநிதி, ’1957-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன். இதுவரை ஒருமுறைகூட தோல்வியை சந்தித்ததில்லை. இந்தமுறை வெற்றி பெற்றால் ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை, ஆறாவது முறையாக நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதை விரும்புபவர்களுள் ஸ்டாலின் மிக முக்கியமானவர். இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.