மீண்டும் அரசியலுக்கு பலியா?: வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சக்திமான் குதிரை சிலை அகற்றம்
சக்திமான் என்ற வெள்ளை குதிரை கடந்த 7 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநில காவல் துறையில் பணியாற்றி வந்தது. இந்நிலையில், பாஜக சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த போராட்டத்தின்போது, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தாக்கியதில் குதிரையின் இடது பின்னங்கால் முறிந்தது. இதையடுத்து சக்திமான் குதிரை உடல்நலக்குறைவால் ஏப்ரல் 20-ம் தேதி உயிரிழந்தது.
இதனிடையே, உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இரண்டு இடங்களில் சக்திமான் குதிரைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலை வைக்கப்பட்டது. அதில் ஒன்று போலீஸ் லைன் பகுதியிலும், மற்றொன்று சட்டசபை கட்டடத்தின் அருகிலும் அமைக்கப்பட்டது.
குதிரை எரிக்கப்பட்ட இடமான போலீஸ் லைன் பகுதியில் வைக்கப்பட்ட சிலையை முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் திறந்து வைப்பதாக இருந்தது. அதேபோல், சட்டசபை அருகில் அமைக்கப்பட்ட சிலை ஜூலை 3-வது வாரத்தில் கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில், சட்டசபை அருகில் அமைக்கப்பட்ட சிலை, இரண்டே நாட்களில் அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு அகற்றப்பட்டுள்ளது. போலீஸ் லைன் பகுதியில் உள்ள சிலையையும் திறந்து வைக்க முதல்வர் மறுத்ததாக தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவத், “சிலையை திறப்பது குறித்து அடுத்த அரசாங்கம் முடிவு செய்யட்டும். நாங்கள் எங்கள் பணியை செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கூறுகையில், “முதல்-மந்திரி ஏன் அவசர அவசரமாக சிலையை வைக்க வேண்டும், இப்பொழுது அதனை கண்டு பயப்பட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், போலீஸ் லைன் பகுதியில் வைக்கப்பட்ட மற்றொரு சிலை அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘சிலை மக்களுக்காக தியாகம் செய்தவர்களுக்கு தான் வைக்க வேண்டுமே தவிர, குதிரைக்கு அல்ல’ என்று கூறி பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.