அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருப்பதை நிறுத்துங்கள்: ராமதாசுக்கு துரைமுருகன் வேண்டுகோள்
தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அவரது பிள்ளை அன்புமணி ராமதாசும் தி.மு.க.வின் மீது பாய்ந்து பிராண்டுவதையே கலையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.
இருவரையுமே கைது செய்து சிறையில் அடைத்த அ.தி.மு.க. ஆட்சியை விமர்சிப்பதைவிட, சமூக நீதியை பாட்டாளி மக்களுக்கு வழங்கிய தி.மு.க.வை விமர்சிப்பதில் ஆர்வம்காட்டி, அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களாகவே மாறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.
ஆளும் அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.க. குற்றம்சாட்டினால், அதற்கு பதில் எங்கிருந்து வருகிறது என்றால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தோ அல்லது அவரது தனயன் அன்புமணி ராமதாசிடம் இருந்தோ தான் பதில் வருகிறது. இவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் அப்படியென்ன ரகசிய உறவு என்ற கேள்வி பாட்டாளி சொந்தங்களுக்கே ஏற்பட்டு, இப்போது பா.ம.க.வில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்திற்கான ஆயத்தப் பணிகள் 2007-2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாக ராமதாஸ் கூறுகிறார். அப்போது எங்களுடன் கூட்டணியில் இருந்தது ராமதாசுடைய பா.ம.க.வா அல்லது வேறு கட்சியா?. அப்போதே தலைவர் கருணாநிதியிடம் எடுத்துக்கூறி தடுத்து இருக்கலாமே?. ஆனால் ராமதாஸ் சொன்னதில் உண்மை ஏதும் இல்லை. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை என்பது அன்புமணி ராமதாஸ் 35 வயதில் தலைவர் கருணாநிதியின் பரிந்துரையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தாரே அப்போதே இந்த கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் உருவாக்கும் கொள்கையை எதிர்க்காமல் அமைதி காத்துவிட்டு, இன்றைக்கு மக்களை சந்திக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் பயணம் நடத்துவது ஏன்?.
ஆனால் தலைவர் கருணாநிதியை பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு முதலீடுகள் கிடைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் கொள்கைப்படி இந்த திட்டம் பற்றி ஆய்வு செய்வதற்குத்தான் முயற்சிகள் எடுத்தாரே தவிர, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அவர் ஆட்சியில் இருக்கும் வரை அந்த பகுதியை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவிக்காமல் இருந்தார். அதற்கான அரசு ஆணைகள் எதையும் வெளியிடாமல் இருந்தார்.
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ள பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை மு.க.ஸ்டாலினும் சரி, தி.மு.க.வும் சரி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதை மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்ப உறுதி செய்திருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை பதவியே போனாலும் பரவாயில்லை என்று எதிர்த்த இயக்கம்தான் தி.மு.க.
மத்திய மந்திரியாக இருக்கும் போது மக்களை சந்திக்காமல், மந்திரி பதவி போனதும் மக்களிடம் ‘புல்லட்’ பயணம் போகும் அரசியலை எந்தக் காலத்திலும் மு.க.ஸ்டாலின் செய்வதில்லை.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.