ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது 6 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் செயல்பாடுகளை பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. விமர்சித்து வருகிறார். மேலும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மோடிக்கு கடந்த 17-ம் தேதி கடிதம் எழுதினார். இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ராஜனின் செயல்பாடுகள் இருப்பதாகவும், அவர் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல எனவும் சுவாமி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 6 விதமான குற்றச்சாட்டுகளுடன் இன்று மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
வட்டி விகிதத்தை உயர்த்தியது சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியது என்று ரகுராம் ராஜன் மீது குற்றம் சுமத்திய சுப்ரமணியன் சுவாமி, வட்டி விகிதத்தை அதிக அளவில் உயர்த்துவதால், தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் என்று அறிந்தும் அவரது கொள்கை வேண்டும் என்றே இருந்ததாகவும், இது தேச விரோத நோக்கம் உடையதாகும் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், மிகவும் ரகசியமான முக்கியத்துவம் வய்ந்த நிதித்தகவல்களை பாதுகாப்பு இல்லாத சிகாகோ பல்கலைக்கழக மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாகவும், பாரதீய ஜனதா அரசை வெளிப்படையாக ரகுராம் ராஜன் இழிவு படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, தன்னால் கூறப்பட்ட ஆறு வித குற்றச்சாட்டுகளுக்கும் உண்மையான முகாந்திரம் இருப்பதாகவும், தேசிய நலன்களுக்காக ரகுராம் ராஜனிடம் இருந்து பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய கோரி கடந்த 15 நாட்களுக்குள் பிரதமருக்கு சுப்ரமணியன் சுவாமி எழுதும் இரண்டாவது கடிதம் இதுவாகும்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.