‘சூலூர்தான் என்னை உருவாக்கிற்று’- மருத்துவமனைத் திறப்பு விழாவில் பழைய நினைவுகளைப் புதுப்பித்து நடிகர் சிவகுமார் பேச்சு.
கோவை மருத்துவ மனையின் கிளையை சூலூரில் ஆரம்பித்துவைத்து நடிகர் சிவகுமார் பேசியதாவது ; ‘சூலூர் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஊர். எனக்குக் கல்வியும் ஒழுக்கமும் போதித்த ஊர். சூலூருக்குப் பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசிக்கவுண்டன் புதூர்தான் எங்க ஊர். அது கிராமம். அங்கே பள்ளிக்கூடம் கிடையாது. எங்க ஊருக்குப் பக்கத்துல இரண்டு பர்லாங் தூரத்துல கலங்கல் அப்படின்னு ஒரு கிராமம். அங்கிருந்த ஒரு பிரைவேட் பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன். ஒண்ணாங்கிளாசுக்கு ஒரு ரூபா. இரண்டாம் கிளாசுக்கு இரண்டு ரூபா. மூணாவதுக்கு மூணு ரூபா. நாலாவதுக்கு நாலு ரூபான்னு கொடுத்துப் படிச்சேன். அந்த ஸ்கூல்ல கல்யாணசாமி நாயுடுன்னு ஒரு வாத்தியார். கணக்குல மிகப்பெரிய மேதை. கால் வாய்ப்பாடு, அரைக்கால் வாய்ப்பாடு, வீசம் வாய்ப்பாடுன்னு சொல்லித்தருவார். ‘கால் அரைக்கால் காசுக்கு நால் அரைக்கால் கத்திரிக்கா. அப்படின்னா ஒரு காசுக்கு எத்தனைக் கத்திரிக்கா?’ என்று கணக்குக் கேட்பார்.
அந்த ஊர்ல நமக்கு மறக்க முடியாத ஒரு விஷயம் உண்டு. சூலூர் சந்தை ரொம்பவும் பிரபலம். மொத மொதல்ல எங்க பெரியம்மா எனக்கு ஒரு நாலணா தந்தாங்க. வெள்ளைக்காரன் காலத்து வெள்ளி நாணயம். முதல் பக்கத்துல 5-ம் ஜார்ஜ் மன்னனுடைய தலை இருக்கும். பின் பக்கத்துல ஒரு புலித் தலை இருக்கும். அதான் நான் முதன் முதல்ல கையால வாங்கிப் பார்த்த பணம். சூலூர் சந்தைக்குப் போற வழியில சீனிவாசன் காபி கிளப்னு ஒரு ஓட்டல் இருக்கும். அந்த ஓட்டல்ல உருளைக்கிழங்கு போண்டா செய்வார்கள். உலகத்துலேயே அப்படி ஒரு டேஸ்ட் இருக்கமுடியுமா என்கிற அளவுக்கு அதன் வாசம் அவ்வளவு பிரமாதமா இருக்கும். பெரியம்மா நாலணா கொடுத்தவுடன் அதற்கு உருளைக்கிழங்கு போண்டா வாங்கிச் சாப்பிடலாம்னு உள்ளே போய்ப் பார்த்தா ‘உருளைக்கிழங்கு போண்டா 4 அணா’ன்னு எழுதியிருக்கு. ஓட்டலுக்குள்ள எல்லாரும் தட்டுல இரண்டு இரண்டு போண்டா வெச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சி. ஒரு போண்டா நாலணான்னா இரண்டு போண்டா எட்டணாவாச்சே. நம்மகிட்ட இருக்கறது நாலணாதானே? ஒரேயொரு போண்டா குடுங்கன்னு கேக்கறதுக்கும் தயக்கம். வெட்கம். அந்தத் தயக்கத்துலயே பேசாமல் பித்தளைத் தம்ளரில் தண்ணியை மட்டும் வாங்கிக் குடிச்சுட்டு ஓட்டல்லருந்து வெளியில் வந்து கந்தசாமித் தேவர் கடைன்னு ஒரு கடை இருக்கும். அந்தக் கடைல ஒரு குச்சிமிட்டாயை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுட்டு ஆசையைத் தீர்த்துப்பேன். கடைசிவரைக்கும் என்னுடைய போண்டா சாப்பிடும் ஆசை நிறைவேறவே இல்லை.
அந்த ஊர்லதான் நான் ஏழு வயசுலருந்து சினிமா பார்க்க ஆரம்பிச்சேன். 14 வயசுவரை 14 படங்கள் பார்த்தேன். சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஆளான நான் 14 வருடங்கள்ள சுமார் 100 படங்கள்ள நடிச்சேன்.
அங்கதான் பராசக்தி படம் வந்தது. 35 லட்ச ரூபாய் செலவில எஸ்.எஸ்.வாசன் உருவாக்கின சந்திரலேகா படம் வந்தது. ஆறு ஆண்டுகள் போராடி எடுத்த ஔவையார் படம் அங்கேதான் ரிலீஸ் ஆனது. எஸ்.எஸ்.வாசன் நாமெல்லாம் கையெடுத்துக் கும்பிட வேண்டிய ஒரு மகத்தான மனிதர். அந்த மனிதரின் டைரக்ஷனில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வந்தது. மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்துல சிவாஜியுடன் சேர்ந்து நடிச்சேன்.
அருமையான தமிழ் வசனங்கள் எல்லாம் வந்த காலம் அது. கலைஞருடைய பராசக்தி, மனோகரா வசனங்கள் எல்லாம் புத்தக வடிவில் அப்போது வரும். ஓசியில் அந்த வசன புத்தகங்களை வாங்கிவந்து மனப்பாடம் பண்ணிப்பேன். எந்த ஊர்ல 15 பைசா குடுத்து 14 திரைப்படங்கள் பார்த்தேனோ அதே ஊர்ல நான் நடிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் திருமலைத் தென்குமரி சமயத்துல ஏ.பி.நாகராஜனுக்குப் பாராட்டு விழா எடுத்தோம். தில்லானா மோகனாம்பாளுக்கு ஜனாதிபதி அவார்டு வாங்கினார் என்பதற்காக எடுத்த விழா அது.
இப்படி சூலூருக்கும் எனக்கும் தொடர்புகள் உண்டு. அப்புறம் உயர்நிலைப் பள்ளியெல்லாம் சூலுர்லதான். அங்கே படிச்சபோது ரத்ன வேல்னு ஒரு வாத்தியார். ஆயிரம் ஆண்டுகள்ள இந்தியாவுல நடந்த சம்பவங்களை வருஷம் வாரியா, மாதம் வாரியா, தேதி வாரியா மனப்பாடம் பண்ணி வைச்சிருந்து சொல்லுவாரு. குப்தர் காலம், மொகாலயர் காலம், மௌரியர் காலம், நாயக்கர் காலம், விஜயநகர சாம்ராஜ்ய காலம், டச்சுக்காரர் காலம், வெள்ளைக்காரர் காலம்னு சொல்லுவாரு. எல்லாம் வருடம் மாதம் தேதி என்று அவ்வளவு துல்லியமா இருக்கும். எனக்கு மனப்பாடத்துக்கான இன்ஸ்பிரேஷனே இந்த வாத்தியார்தான்.
இன்னொருத்தர் விஜயராகவ ஐயங்கார். சுத்தமான காந்தியவாதி. குடுமியெல்லாம் வச்சிருப்பார். பாரதியாரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே இவர்தான்.
இப்ப விஷயத்துக்கு வர்றேன். காப்பி டீ என் நாக்கில் பட்டு 58 வருஷம் ஆகிறது. 87 கதாநாயகிகளோட டூயட் பாடி நடிச்சிருக்கேன். குடும்ப வாழ்க்கைல ஒரு பெண்மணியோட குடும்பம் நடத்திட்டிருக்கேன். இப்படி ஒழுக்கமும் நேர்மையுமா வாழ்க்கையை அமைச்சுக்கறதுக்கு அடிப்படை என்னன்னு பார்க்கணும்.
இந்த மானுட வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை என்னவென்பதை விவேகானந்தர் சொல்லியிருக்கார். நாம இரண்டு உடம்பால் வாழறோம். ஒண்ணு பௌதிக உடம்பு; கை கால் முகம் இதெல்லாம் வெளிப்படையாத் தெரியற உடம்பு. இன்னொன்னு சூட்சும உடம்பு. கண்ணுக்குத் தெரியாத அறிவும் உயிரும் இணைந்தது. ஆங்கிலத்துல spiritual body, physical body அப்படின்னு வச்சுக்கலாம். கண்ணுக்குத் தெரியாத சூட்சும உடம்புல ஒண்ணுமே தெரியாது. ஆனா கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த உடம்புதான் 20ல் இருந்தமாதிரி 40ல் இருப்பதில்லை; 40ல் இருந்தமாதிரி 60ல் இருப்பதில்லை, 60ல் இருந்தமாதிரி 80ல் இருப்பதில்லை. வயதாக வயதாக உடம்பு தளர்ந்துபோய் ஓட முடியாமல், சாப்பிட முடியாமல், பார்க்கமுடியாமல், பேச முடியாமல், கேட்க முடியாமல் போய்விடுகிறது. ஆக உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்றாகிறது. இந்த உடம்பைப் பேணிப் பாதுகாப்பது எப்படி என்பதையும், உடம்போடு ஒழுக்கத்தைப் பாதுகாப்பதன் மூலம் சூட்சும உடம்பைப் பாதுகாப்பது எப்படி என்பதையெல்லாம் சூலூர் பள்ளிதான் எனக்குச் சொல்லித் தந்தது. என்னை உருவாக்கிய இந்த ஊரில் கோவை மெடிக்கல்ஸ் மருத்துவ மனையின் கிளையை உருவாக்குவதில் பெரிதும் மகிழ்கிறேன்’- இவ்வாறு பேசினார் நடிகர் சிவகுமார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.