ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கான போட்டியில் என்னையும் சேர்க்கவேண்டும் – மோடிக்கு சுஷில்குமார் கடிதம்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான மல்யுத்த பந்தயத்தில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய வீரர் நார்சிங் யாதவ் தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் மும்பையை சேர்ந்த 26 வயதான நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை பெற்றார்.
2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றவரான டெல்லியை சேர்ந்த 32 வயதான சுஷில்குமார் தோள்பட்டை காயம் காரணமாக உலக போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த எடைப்பிரிவில் ஒருவருக்கு தான் இந்தியா சார்பில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க முடியும் என்பதால் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய மல்யுத்த அணியில் சுஷில்குமார் பெயர் இடம் பெறவில்லை என்று செய்திகள் வெளியாயின.
இதற்கிடையில் தனக்கும், நார்சிங் யாதவ்க்கும் இடையே தகுதி போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சுஷில்குமார் இந்திய மல்யுத்த பெடரேஷனுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். ஆனால் இதற்கு இந்திய மல்யுத்த பெடரேஷன் செவிசாய்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து சுஷில்குமார், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தனக்கு தகுதி போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதேபோல் மத்திய விளையாட்டு துறை மந்திரி சர்பானந்தா சோனாவால், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளுக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார். ‘பிரதமர் தலையிட்டாலும் இந்த பிரச்சினையில் தீர்வு வரும் என்று நான் நினைக்கவில்லை யார் தகுதி பெற்று இருக்கிறார்களோ? அவர்கள் ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்வார்கள்’ என்று இந்திய மல்யுத்த பெடரேஷன் தலைவர் பிர்ஜ்பூஷன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தகுதி போட்டி நடத்த இந்திய மல்யுத்த பெடரேஷன் தொடர்ந்து மறுத்தால் சுஷில்குமார் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடருவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தனக்கு தகுதி போட்டி நடத்த வேண்டும் என்று சுஷில்குமார் விடுத்து இருக்கும் கோரிக்கை குறித்து முடிவு செய்ய இந்திய மல்யுத்த பெடரேஷனின் தேர்வு கமிட்டியின் கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் தகுதி தேர்வு போட்டி நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.