சுப்பிரமணிய சாமியின் திட்டம் பலிக்குமா? திமுக, பாஜக, தேமுதிக, பாமக என்று புதிய கூட்டணி. ஸ்டாலின் முதலமைச்சர்!
தமிழ்நாடு அரசியலில் தினமும் புதிது புதிதாக காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கூட்டணிகள் இன்னமும் முடிவாகாத நிலையில் அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்ற நிலைதான் நிலவி வருகிறது. நேற்றுவரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதிக்கொண்டிருந்த இரண்டு அணிகளை ஒன்று சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வளவு நாட்களும் சம்பந்த்மே இல்லாமல் இருந்து திடீரென்று களத்தில் குதித்த சுப்பிரமணியம் சாமி அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய திட்டம் பலரைத் திடுக்கிடச் செய்தது என்பதுதான் நிஜம்.
திமுக, பாஜக, தேமுதிக, பாமக என்ற கட்சிகள் ஓரணியில் என்றும் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதும் சாமியின் திட்டம்.
சுப்பிரமணிய சாமியும் சரி, பாஜகவும் சரி அதிமுகவுக்கு நெருக்கமானவர்கள். அல்லது பாஜகவின் சித்தாந்தங்கள் அதிமுகவுக்கு நெருக்கமானவை. அப்படியிருக்கும்போது திமுக எப்படி உள்ளே வந்தது? என்பதுதான் பலருடைய கேள்வியும்.
இதற்கான பதில் அரசியல் சித்தாந்தத்துடன் இந்த விஷயத்தை அணுகினால் கிடைக்காது. நடைமுறை சித்தாந்தத்தை அணுகவேண்டும். அதன்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட அத்தனை சர்வேக்களும் திமுகவுக்கு சாதகமாகவே வந்துள்ளன. சில சர்வேக்களில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடைவெளியே வெறும் பாயிண்ட் ஒரு பர்சண்ட் என்றும் 1.5 பர்செண்ட் என்றும்தான் தெரிவிக்கின்றன. ஸ்டாலினின் நமக்கு நாமே மற்றும் திமுகவின் பிரச்சார பலம் இவற்றால் இந்த ஒன்று ஒன்றரை சதவீதத்தை சுலபமாய் மாற்றிவிட முடியும். அல்லது இந்த சதவிகிதத்தை விஜயகாந்தோ அல்லது வேறொரு கட்சியோ திமுகவுடன் கூட்டுச்சேரும் பட்சத்தில் சுலபமாய் பெற்றுவிட முடியும். அப்படியிருக்க திமுக பதவியில் அமர்வதை யாராலும் தடுத்துவிட முடியாது. அப்படி திமுகவை ஆட்சியில் அமரவைத்துவிட்டு பிறகு என்ன அரசியல் வேண்டிக்கிடக்கிறது என்ற சிந்தனைக்குத்தான் பாஜக வந்திருக்கவேண்டும்.
அவர்களுக்கு இதில் நிறைய லாபங்கள் இருக்கின்றன. எப்படியும் இருபத்தைந்து முதல் முப்பது எம்எல்ஏக்களைப் பெற்றுவிடலாம்; தேமுதிகவுக்கும் இது ஒரு அருமையான சூழல். அவர்களும் கணிசமான எம்எல்ஏக்களைப் பெறுவார்கள்.
திமுகவுக்கு பாஜக, தேமுதிக ஆதரவு கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க ஜெயலலிதாவை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்து நிற்க முடியும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க ஸ்டாலின் முதல் மந்திரி என்ற நிர்ப்பந்தம் கருணாநிதியை எப்படி இறங்கவைப்பது என்ற குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்டுவதாக அமையும். இப்படித்தான் திமுகவில் இந்தப் புதிய அணி குறித்து எதிர்பார்க்கிறார்கள். இது சரிப்பட்டு வருமா அல்லது வேறு அணிகள் அமையுமா என்பதை வரும்நாட்கள்தான் உறுதிப்படுத்தும்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.