சுவாதி கொலை வழக்கு: கோர்ட்டில் 5 பேர் ரகசிய வாக்குமூலம்
தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்த சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி. கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி வேலைக்கு சென்ற போது நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுவாதியை கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை ஜூலை 1-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சென்னை குற்றவியல் தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில், சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் முன்னிலையில் சுவாதியின் நண்பர் முகமது பிலால், சுவாதியின் தோழி, டீக்கடைக்காரர், காவலாளி உள்பட 5 பேர் சுமார் 6 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். 5 பேரும் மாஜிஸ்திரேட்டிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளித்தனர்.
சுவாதியை பின்தொடர்ந்த நபர் குறித்து அவர்களிடம் மாஜிஸ்திரேட்டு கேட்டு, அவர்கள் கூறிய கருத்தை பதிவு செய்தார்.
பின்னர் இதுபற்றி சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் கேட்டபோது, “போலீசாரிடம் நான் என்ன வாக்குமூலம் தந்தேனோ அதைத்தான் மாஜிஸ்திரேட்டிடம் சொன்னேன். மேலும் மாஜிஸ்திரேட்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். யார்-யார் வாக்குமூலம் தர வந்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது” என்றார்.
5 பேர் ரகசிய வாக்குமூலம் தந்ததால் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
-Amudhavan
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.