சுவாதி, நவீனா கொலை; பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்.
ஒருதலை காதல் விவகாரத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதேபோல் விழுப்புரத்தில் நவீனா என்ற மாணவி எரித்து கொல்லப்பட்டார்.
இதேபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருவதை கண்டித்தும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் பா.ம.க. சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
நாடக காதலை தடுக்க வேண்டும், காதல் என்ற போர்வையில் இளம் பெண்கள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கொலை குற்றவாளிகளுக்கு துணை போகும் கும்பல்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
விழுப்புரத்தில் எரித்து கொல்லப்பட்ட மாணவி நவீனாவின் தாய் நாவம்மா, தந்தை அங்கப்பன், தம்பி லோகேஷ் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாவம்மா தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சொல்லி கதறி அழுதார். இதேபோல் கடலூரில் மகளை இழந்த ஒரு பெண்ணும் கதறி அழுதார்.
பெண்கள் கதறியதை பார்த்து ஆர்ப்பாட்டத்தில் நிசப்தமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஜாதி அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், காதலுக்கோ அல்லது சமுதாயங்களுக்கோ பா.ம.க. எதிரானது அல்ல. ஆனால் காதல் என்ற போர்வையில் நாடக காதலை அரங்கேற்றி நடைபெறும் மோசடிகளை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டு அந்த சம்பவங்களையும் ஜி.கே.மணி விளக்கி கூறினார். முடிவில் ராமதாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் கே.என். சேகர், திருக்கச்சூர் ஆறுமுகம், துணைத்தலைவர் ஈகை தயாளன், மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், கன்னியப்பன், ஏழுமலை, கோயம்பேடு பாண்டியன், சுப்பிரமணியன், ஜமுனா கேசவன், மற்றும் அடையாறு வடிவேல், கண்ணன், பசுமை தாயகம் அருள், கசாலி, டி.எஸ்.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.