என்னையும் என் காதலையும் சுவாதி நிராகரித்தாள். ஆகவே அவளைக் கொன்றேன்- கொலையாளி ராம்குமார் சாட்சியம்.
கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்தார். அவரிடம் தனிப்படை போலீசார் மெல்ல பேச்சு கொடுத்தனர். அப்போது ராம்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-
‘நெல்லை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன்.
நான் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். அதே நேரத்தில் சுவாதியும் வேலைக்கு புறப்பட்டு வருவார். அப்போது இருவரும் பேசிக் கொள்வோம். சுவாதியிடம் நான் என்ஜினீயரிங் பட்டதாரி என அறிமுகம் செய்து பழகி வந்தேன். நாளடைவில் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.
இந்நிலையில் நான் என்ஜினீயரிங் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதும், ஜவுளிக்கடையில் வேலை செய்வதும் சுவாதிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.
காலையில் வேலைக்கு செல்லும்போது அவரது தந்தையை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனால் வழியில் அவரை சந்தித்து பேச முடியவில்லை. எனவே நுங்கம்பாக்கம்ரெயில் நிலையத்திற்கு சென்று 2 முறை அவரிடம் பேசினேன். அப்போது எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி சுவாதியிடம் கெஞ்சினேன்.
ஆனால் அவர் ‘உனக்கும், எனக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை, பின்னர் ஏன் பின்னாடி சுற்றுகிறாய்’ என கூறி என்னை திட்டினார். இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். எனது பேக்கில் புத்தகங்களுடன் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு 2 நாட்களாக சுவாதியை பின் தொடர்ந்தேன்.
கடந்த 24-ந் தேதி காலை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி ரெயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன்’ என தனிப்படை போலீசாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.