டிடிவி தினகரன் அதிமுகவின் வேட்பாளர்.
ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் அதன் அமைப்பாளர் தீபா இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் நிற்க அதிக வாய்ப்புள்ளது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அ.தி.மு.க கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு அணியாக இயங்கி வருகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கி உள்ளார்.
இந்த 3 அணிகளுமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க தனி ஆவர்த்தனம் காட்டி வருகின்றன. சசிகலா ஆதரவு அ.தி.மு.க.வினரும், ஓ.பி.எஸ். அணியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தனித்தனியாக ஆட்சிமன்ற குழுக்களையும் அமைத்துள்ளனர்.
“இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் முதலமைச்சர் ஆவீர்களா?” என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன் “இப்போது முதல்- அமைச்சராக இருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு கட்சியினராலும், பொதுமக்களாலும் பாராட்டப்படுவது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
எனவே ஆர்.கே.நகரில் நான் வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்- அமைச்சர். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான்.
மறைந்த புரட்சித் தலைவி அம்மாவின் பணிகளை தான் தொடர்ந்து நிறைவேற்ற ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். அம்மாவுடன் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள். அவர் மிகப்பெரிய தலைவர். நான் சாதாரண தொண்டன்.
கே:- சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார். அவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. புகார் செய்து இருக்கிறதே?
ப:- தி.மு.க.வினருக்கு துரைமுருகனை கமிஷனராக போட்டால்தான் திருப்தியாக இருப்பார்கள். அல்லது சேகர்பாபுவை போட்டால் திருப்தி என்பார்கள். இதுபற்றி என்னிடம் ஏன் கேட்க வேண்டும்.
கே:- மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை கேட்பீர்களா?
ப:- மக்கள் நலக்கூட்டணி மட்டுமல்ல, வைகோ, விஜயகாந்த், காங்கிரஸ், பா.ஜனதா ஆகியோரும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதை இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலம் வேண்டுகோளாக விடுக்கிறேன். எங்களது ஒரே எதிரி தி.மு.க.தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்து தந்த வழியில் பொதுச்செயலாளர் சசிகலா ஆலோசனையின்படி இயக்கம் செயல்படுகிறது.
தி.மு.க.வை எதிர்க்கும் எண்ணத்தோடும் ஆர்.கே. நகரில் திமு.க. வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவும்தான் நான் போட்டியிடுகிறேன். எனவே பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அதை ஏற்போம்.
கே:- திராவிட இயக்கம் அழிந்து வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தாரே, இப்போது அந்த கட்சியை கூட்டணிக்கு அழைத்து இருக்கிறீர்களே?
ப:- பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது தனிப்பட்ட கருத்து. நான் அழைப்பு விடுப்பது பா.ஜனதா கட்சிக்குத்தான். இதேபோல் காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணிக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
கே:- கடந்த சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துதானே போட்டியிட்டார். இப்போது நீங்கள் எல்லா கட்சியையும் அழைக்கிறீர்களே?
ப:- புரட்சித் தலைவி அம்மா ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு முடிவை எடுத்து இருக்கிறார். எனவே அம்மாவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் ஒரு மாபெரும் தலைவர். அவரோடு சாதாரண தொண்டனான என்னை ஒப்பிட்டு பேசுவது வருத்தம் அளிக்கிறது.
அம்மா மறைவுக்குப் பிறகு அவரது வேட்பாளராகிய என்னை பொதுமக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.