புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்.
1938ல் மயிலாடுதுறை அருகே பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் ரங்கநாதன். 1968-ல் கவிதைகளை எழுத தொடங்கினார் ஞானக்கூத்தன். இன்றைய நவீன கவிதைகளின் முன்னோடிகளில் மிக முக்கியமானவர். ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் இடம்பெற்றிருந்தார்.
‘அன்று வேறு கிழமை’, ‘சூரியனுக்குப் பின் பக்கம்’, ‘கடற்கரையில் ஒரு ஆலமரம்’ போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை. சமீபமாக, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த ஞானக்கூத்தன் சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி ஈஸ்வர லாலா தாஸ் தெருவில் உள்ள மகனது இல்லத்தில் ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு, தமிழ் இலக்கிய உலகத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய தமிழ் படைப்பாளிகள் சமூகவலைதளங்களில் பதிந்த அஞ்சலி குறிப்புகள்:
கவிஞர் வண்ணதாசன்: மஹா ஸ்வேதா தேவி, வாலேஸ்வரன், ஞானக்கூத்தன்… முதிய பறவைகள் எல்லாம் இன்று கூடு திரும்பிவிட்டன. கிளைகளிலும் வானத்திலும் காணப்படாத கூடுகளுக்கு…
கவிஞர் மனுஷ்யபுத்திரன்: கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார் என்ற தகவல் சற்று முன் கிடைத்தது. மனம் அடையும் தடுமாற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ஆசானின் மறைவை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல..
கவிஞர் வசந்த பாலன்: மிக முக்கிய கவி ஞானக்கூத்தன் மறைவு செய்தி மனதை பிசைகிறது.
கவிஞர் ரவிகுமார்: தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும் நல்ல மனிதருமான ஞானக்கூத்தன் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
கவிஞர் சல்மா: கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களது மரணம் தரும் அதிர்ச்சியும் சோகமும் இன்றைய அதிகாலையை வெறுமையானதாக மாற்றியிருக்கிறது (:-கவிக்கு ஏது மரணம்?
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.