ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: 388 ரன்கள் இலக்கைப் பிடித்து இலங்கை அணி வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 388 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை–ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 356 ரன்னும், இலங்கை அணி 346 ரன்னும் சேர்த்து ‘ஆல்–அவுட்’ ஆனது.
10 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 377 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து இருந்தது. குசல் மென்டிஸ் 60 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 17 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.
நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. குசல் மென்டிஸ் (66 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் விக்கெட்டை கேப்டன் கிரீமர் விரைவில் வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணி, இலங்கையை முதல்முறையாக வீழ்த்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
6–வது விக்கெட்டுக்கு குணரத்னே, டிக்வெல்லாவுடன் இணைந்தார். இந்த இணை நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி ஜிம்பாப்வே அணியின் வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். டிக்வெல்லா 81 ரன்கள் (118 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழந்தார். டிக்வெல்லா–குணரத்னே இணை 121 ரன்கள் திரட்டி அணி தோல்வியில் இருந்து தப்ப வழிவகுத்தது.
அடுத்து தில்ருவன் பெரேரா, குணரத்னேவுடன் ஜோடி சேர்ந்தார். 114.5 ஓவர்களில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குணரத்னே 80 ரன்னுடனும், தில்ருவன் பெரேரா 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் கிரீமர் 4 விக்கெட்டும், சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சகப்வாவின் மோசமான விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் சொதப்பல் காரணமாக ஜிம்பாப்வே அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை வென்றது. இலங்கை அணி வீரர்கள் குணரத்னே ஆட்டநாயகன் விருதையும், ரங்கனா ஹெராத் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இலங்கை அணி 388 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்து இருப்பது ஆசிய மண்ணில் செய்யப்பட்ட அதிகபட்ச சேசிங் ஆகும். இதற்கு முன்பு 2008–ம் ஆண்டில் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 387 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்ததே ஆசிய சாதனையாக இருந்தது. இலங்கை மண்ணில் செய்யப்பட்ட அதிகபட்ச சேசிங்கும் இது தான். இதற்கு முன்பு 2015–ம் ஆண்டில் பல்லகலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 377 ரன்களை இலக்கை எட்டியதே அதிகபட்சமாக இருந்தது. டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் அதிகபட்ச சேசிங் இதுவாகும். அந்த அணி 2006–ம் ஆண்டில் கொழும்பில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 352 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்ததே சிறப்பானதாக இருந்தது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.