எம்ஜிஆர் சிவாஜியால் மதிக்கப்பட்ட இயக்குநர்: மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் பற்றி நடிகர் சிவகுமார்.
மறைந்த இயக்குநர் திருலோகசந்தர் பற்றி நடிகர் சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது ; இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு யார் எந்த டாக்டர் பிரசவம் பார்த்தாரோ அதே டாக்டர் லட்சுமணசாமி முதலியார்தான் ஏசிடியின் அம்மாவுக்கும் பிரசவம் பார்த்தார். அப்போது பிறந்தவர்தான் ஏசிடி. உயர்ந்த மனிதர், உயரத்திலும் உயர்ந்தவர். ஆறு அடி மூன்று அங்குலம். எம்ஏ படித்தவர். மிகவும் சாந்தமானவர். சிறுவயதிலேயே படிக்கிற ஆர்வம் திருலோக் சாருக்கு அதிகம். எம்ஏ பட்டதாரியானவுடன் குமாரி படத்தில் உதவியாளராகச் சேர்கிறார். அந்தப் படத்தின் கதாநாயகன் எம்ஜிஆர். முதல் நாளிலிருந்தே எம்ஜிஆரின் நல்லெண்ணத்தைப் பெற்றவர். எம்ஜிஆர் தன்னுடைய மோதிரம் வாட்ச் மற்றும் பணத்தை ஏசிடியிடம் கொடுத்து வைத்து படப்பிடிப்பு முடிந்ததும் திரும்ப பெற்றுச் செல்வார். அந்த அளவு இவர் மீது எம்ஜிஆருக்கு நம்பிக்கை. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே எம்ஜிஆரை வைத்து ஏவிஎம் பேனருக்காக அன்பே வா என்ற படத்தை எடுத்து அதனை சூப்பர் ஹிட் படமாக மாற்றினார் ஏசிடி.
ஏவிஎம் செட்டியாருக்கு நான்கு மகன்கள். அந்த நான்கு மகன்களுடன் ஐந்தாவது மகனாக ஏவிஎம்மில் வளர்ந்தவர் ஏசிடி. ஏவிஎம் நிறுவனத்தில் இவர் டைரக்ஷனில் வந்த முதல் படம் வீரத்திருமகன். அதில் சச்சுவை அறிமுகப்படுத்தினார். அடுத்தது நானும் ஒரு பெண். இதில் ஏவிஎம் ராஜனையும், புஷ்பலதாவையும் அறிமுகப்படுத்தினார். இதற்கு அடுத்த படம் காக்கும் கரங்கள். அதில் இரண்டாவது கதாநாயகனாக என்னை அறிமுகம் செய்தார்.
சிவாஜி அவர்களோடு இருபத்தைந்து படங்கள் செய்திருக்கிறார். ஒரே மேக்கப் ரூம். ஒரே கேரியரில் சாப்பாடு வரும். சிவாஜியும் இவரும் ஒரே தட்டில் பரிமாறி சாப்பிடுவார்கள். ஒரே பெட்டில் படுத்துத் தூங்குவார்கள். அந்த மாதிரி சிவாஜியுடன் இருபத்தைந்து படங்கள் பணியாற்றியவர்.
தமிழ் தெலுங்கு இந்தியில் மொத்தம் அறுபத்தேழு படங்கள் இயக்கியிருக்கிறார். தெய்வமகன் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த படம். இந்தப் படம்தான் முதன்முதலாக ஆஸ்கருக்குச் சென்ற தமிழ்ப்படம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எங்கிருந்தோ வந்தாள் படமும் ஏசிடியுடையதுதான்.
இவர் சொந்தமாக எடுத்த படங்களில் பத்ரகாளி குறிப்பிடத்தக்கது. அதில் நான் கதாநாயகன். ராணிசந்திரா என்ற புதுமுகம் கதாநாயகி. ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சினை வந்தது. அறுபது சதவிகிதப் படம் முடிந்திருந்த சூழலில் கதாநாயகியாக நடித்துவந்த ராணிசந்திரா மும்பையில் நடைபெற்ற விமானவிபத்தில் அகாலமாக மரணமடைந்தார். நொறுங்கிப்போய் விட்டார் ஏசிடி. “அவ்வளவுதான் என்னுடைய மொத்த வாழ்க்கையே போய்விட்டது” என்று உடைந்துபோய்விட்டார்.
என்னுடன் வேறொரு படத்தில் நடித்திருந்த புஷ்பா என்ற நடனப்பெண்மணியின் நினைவு வந்தது. ஓரளவு ராணிசந்திராவின் சாயலை ஒத்திருந்தவர் அவர். அவரை அழைத்துவந்து மேக்கப் டெஸ்ட் போட்டு ஒளிப்பதிவாளரின் சிறப்பான ஒத்துழைப்புடன் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்து ரிலீஸ் செய்தோம். படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இன்றைய என்னுடைய வாழ்க்கை, பக்கத்தில் நிற்கும் என்னுடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்தி இவர்களுடைய உயர்வு, இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இதற்கெல்லாம் காரணமாயிருந்த திருலோக் சாரை என்னால் மறக்கவே முடியாது.” இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார் சிவகுமார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.