உலகின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்.
‘தி கிரேட்டஸ்ட்’ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் குடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வருகிறார்.
சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுப்பேற்றிருந்தபோது, சென்னை வந்திருந்த முஹம்மது அலி, இங்குள்ள ஒரு விளையாட்டு அரங்கில் நம்மூர் இளைஞர்களுடன் ‘ஷோ பாக்சிங்’ செய்தது நினைவிருக்கலாம். அப்போது ஒரு சிறுவன் விட்ட குத்தை எதிர்கொண்ட முஹம்மது அலி, வலியால் துடிப்பதுபோல் நடித்து, கைதட்டல்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.