சசிகலாவுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
குடும்ப அரசியல் கூடாது என்பதே மறைந்த ஜெயலலிதாவின் எண்ணம். ஜெயலலிதா அதை உறுதியாக கடைப்பிடித்தார். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்க கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஆரோக்கியமான அரசியலுக்கு அது வழி வகுக்காது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது என்னை முதல்-அமைச்சராக பொறுப்பேற்க சொன்னார்கள். கட்சி நலன் கருதி அதை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு சசிகலா பொதுச்செயலாளரானார். அதன் பிறகு முதல்- அமைச்சராக வர ஆசைப்பட்டார். இதனால் பிரச்சனை ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது.
எனக்கு தெரியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு விடை தெரிய வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் எதுவும் விளக்கவில்லை. அரசியல் லாபத்திற்காக ஜெயலலிதா மரணம் பற்றி ஸ்டாலின் சந்தேகம் எழுப்புகிறார். என்னையும் கேள்வி கேட்கிறார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. ஆர்.கே.நகரில் தி.மு.க. தோற்பது உறுதியாகி விட்டது.
தி.மு.க.வின் பலவீனத்தை ஸ்டாலின் நேற்று பேசும்போது வெளிப்படுத்தியுள்ளார்.
நிறைவேறாத வாக்குறுதிகளை டி.டி.வி. தினகரன் தருகிறார். யாரை பொதுச்செயலாளர் ஆக்குவது என்பது குறித்த பிரச்சனையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது தற்காலிகமாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என முடிவு செய்தோம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் மட்டுமே போட்டியில் இருக்கிறோம். டி.டி.வி. தினகரன், தி.மு.க. பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
பேட்டியின்போது கே.பி. முனுசாமி, பொன்னையன், செம்மலை, கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி.பிரபாகர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.