அ.தி.மு.க-வை அழிக்க சதி நடக்கிறது: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த நிலையில் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நள்ளிரவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது.,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப்படுகொலை. விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றியதாக கூறுவதில் உண்மையில்லை. தொகுதியில் 70% பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
நான் வெற்றி பெறுவேன் எனத்தெரிந்து தேர்தலை தடுத்து நிறுத்த முயற்சி. அதிகாரம் இருப்பதால் ஆணையம் தேர்தலை நிறுத்தி உள்ளது. பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது. இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க ஆணையத்திடம் கோருவோம்.
தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த அவசியம் என்ன? ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அதிமுகவை அழிக்க சதிசெய்கின்றனர். எனது வெற்றி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. அமைதியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தோம்.
ஆர்.கே.நகரில் பாஜக 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது. பாஜகவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. 4 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வோம். அதிமுகவை அழிக்க யார் சதி செய்கின்றனர் என்பது விரைவில் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.