ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது: ஜெ.தீபா தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததையடுத்து, அதுபற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
அவ்வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. போயஸ் தோட்டத்தில் இருந்த ஒரு நபர் பல்வேறு தகவல்களை எங்களுக்கு தந்துள்ளார். எனவே, போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த அனைவரிடமும், சசிகலா குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த ராஜம்மாளையும் விசாரிக்க வேண்டும்” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.