சுவாதி கொலையான நாளில் எந்த போலீசாரும் பாதுகாப்பில் இல்லை: ரெயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. பேட்டி
ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் (ஆர்.பி.எப்) ஐ.ஜி. எஸ்.சி.பாரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு குறித்து கடந்த மாதம் 16-ந்தேதி முதல் இன்று வரையிலான ஒரு மாதம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறோம். 182 என்னும் உதவி எண் மூலம் தொடர்புகொண்டு குறைகளை தெரிவிக்கும் ரெயில் பயணிகளை உடனே அணுகி பிரச்சினைகளை தீர்க்கிறோம்.
தெற்கு ரெயில்வே முழுவதும் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 4 ஆயிரத்து 200 பாதுகாப்புப்படை போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இ-டிக்கெட் சேவையில் முறைகேட்டில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்து உள்ளோம். அவர்களிடம் இருந்து ரூ.2.72 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. முறைகேடான பயணம் மேற்கொண்ட 2,256 பேரிடம் இருந்து ரூ.8½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒன்று. மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சென்னை கோட்டத்தில் 82 இடங்கள் உள்பட தெற்கு ரெயில்வே முழுவதும் 136 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் ரெயில் நிலையங்கள் கூடுதல் பாதுகாப்புடன் செயல்படும். இதற்காக ரூ.28.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சுவாதி கொலையான நாளில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருந்தனரா?
பதில்:- சம்பவம் நடந்த நாளில் அங்கு எந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் இல்லை. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பணி முடித்ததும், அடுத்த ரெயில் நிலையத்துக்கு போலீசார் சென்றுவிட்டனர். ஒருவேளை போலீசார் அங்கு இருந்திருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
கேள்வி:- அனைத்து ரெயில் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் வருவது எப்போது?
பதில்:- 95 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரெயில் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும்.
கேள்வி:- பயணிகள் பாதுகாப்புக்காக ஏதேனும் செல்போன் ‘அப்ளிகேஷன்’ அறிமுகப்படுத்தப்படுமா?
பதில்: பயணிகளின் எல்லா தேவைகளையும் ஒருசேர ஒருங்கிணைக்க ஏதுவாக ஒற்றை சாளர முறையில் புதிய ‘அப்ளிகேஷன்’ தொடங்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏனெனில் இதில் பல சிக்கல்கள் உள்ளன. விரைவில் இந்த ‘அப்ளிகேஷன்’ தொடங்குவது குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.