விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய டிவி ‘வெளிச்சம்’; விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகர் விஜய் ஸ்ரீமகாலில் இன்று நடந்தது.
விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் வெளிச்சம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். ஊடக முதன்மை செயலாளர் பனையூர் பாபு வரவேற்றார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ‘வெளிச்சம்’ புதிய தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் திருமாவளவன் பேசியதாவது:–
வெளிச்சம் தொலைக் காட்சியை தொடங்கி வைக்க விஜயகாந்தை நான் அணுகிய போது ஏப்ரல் 14–ந்தேதி நல்ல நாள் அல்ல. அது அஷ்டமி, மறுநாள் நவமி. இது உகந்த தல்ல என்றார்.
ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் தொடக்க விழாவை இன்றே நடத்த முடிவு செய்தோம். அஷ்டமி என்பது வடமொழி சொல் ஆகும். அது இந்துத்வாவின் கருத்தாகும். அஷ்டமி என்பது அமாவாசையில் இருந்து 8–வது நாளில் வருகிறது. அதனால் இது உகந்ததாக இருக்காது என்று விஜயகாந்த் கூறினாலும் அம்பேத்கரின் 125–வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது என்ற காரணத்தினால் இந்த ‘வெளிச்சம்’ தொலைக் காட்சி இந்த நாளில் தொடங்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் பிறந்த நாளை இந்திய அளவில் கொண்டாட தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் உலகத் தலைவர்கள் வரிசையில் அவரை உயர்த்தி அமெரிக்காவில் அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கரின் 125–வது பிறந்த நாளை அரசு விழாவாக நடத்துகிறார். அதனால் இந்த நாளில் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை தொடங்க வேண்டும் என்பது எங்களது ஆசை.
இந்த நிகழ்ச்சியில் 5 தலைவர்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் என்பது வெற்றி காந்த் என்றால் ஈர்ப்பு. அதாவது வெற்றியை ஈர்க்கும் சக்தியாக விஜயகாந்த் திகழ்கிறார். அவர் இந்த தொலைக் காட்சியை தொடங்கி வைத்திருப்பது பூரிப்பாகவும், பெருமையாகவும், தலை நிமிர்ந்திருக்கவும் செய்கிறது.
விழா நடக்கக் கூடிய இந்த இடத்தை வைகோ தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்த பிறகுதான் கூட்டணியின் தன்மையும், வடிவமும் மாறிவிட்டது. இந்த கூட்டணி நீடிக்காது நிலைக்காது என்று கூறினார்கள். அரும்பாடுபட்டு கூட்டணி கட்டமைப்பை வலுப்படுத்தியவர் வைகோ.. இந்த ஓரிரு மாதங்களில் விஜயகாந்துடன் சந்திக்க வாய்ப்பு அதிகம் கிடைத்தது. மனதில் பட்டதை கூறும் தன்மை உடைய விஜயகாந்த்தை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொன்னாலும் அவரது உள்ளம் வெள்ளையாக இருக்கிறது.
தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறுமோ இல்லையோ ஆனால் இந்த கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தது எங்களுக்கு பெரிய வெற்றி. அவர் எந்த ஆசாபாசத்துக்கும் அடிபணியவில்லை. கூட்டணி வதந்திகளை பொடிப்பொடியாக்கி விட்டு ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, ஆட்சி மாற்றம் ஆகிய 3 குறிக்கோளை கொண்ட மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளின் சமூக வலைதளங்களை வைகோ திறந்து வைத்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.