திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தலைவர்கள் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வள்ளுவருக்கு ஹரித்துவாரில் சிலை அமைக்க வேண்டும் என்று யாரிடமும் தமிழர்கள் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக, தருண் விஜய் தமக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்குடனும், தாம் சார்ந்த அமைப்புகளை தமிழகத்தில் காலூன்றச் செய்வதற்காகவும் திருவள்ளுவரை வாழ வைக்க அவதாரம் எடுத்தவரைப் போல காட்டிக் கொண்டு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார்.
அவரது இந்த முயற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போனார்கள்.
வள்ளுவரின் சிலை அமைக்கப்படுவதால் ஹரித்துவாருக்கு மரியாதையும், புகழும் கிடைக்குமே தவிர, ஹரித்துவார் சிலை வைக்கப்படுவதால் வள்ளுவருக்கு எந்த வகையிலும் பெருமை சேரப்போவதில்லை.
வள்ளுவரை அவமதித்த ஹரித்துவார் மண், அவரது சிலையை தாங்கும் தகுதியை இழந்து விட்டது. தம்மை அவமதித்த அம்மண்ணில் சிலையாக நிற்க வள்ளுவரும் விரும்ப மாட்டார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ்கொண்ட தமிழ்நாடு தான் அவரின் சிலை அமைய சரியான இடமாகும்.
எனவே, ஹரித்துவாரில் கேட்பாரற்று கிடக்கும் வள்ளுவரின் சிலையை உடனடியாக மீட்டு, தமிழகத்திற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத் தமிழ் சங்கத்தின் வளாகத்திலோ, சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகத்திலோ வள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும்; மிகப் பெரிய விழா எடுத்து வள்ளுவர் சிலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவரின் சிலையை நிறுவ பா.ஜ.க மூத்த தலைவர் தருண் விஜய் முயற்சிகளை மேற்கொண்டார். திருவள்ளுவர் சிலையை நிறுவ, முதலில் ஹரித்துவாரில் உள்ள ஹர்க்கிபவுரி என்ற இடத்திலும், பின்பு கங்கைக் கரையோரம் உள்ள சங்கராச்சாரியார் சதுக்கத்திலும், திருவள்ளுவர் சிலையை நிறுவுவதாக இருந்தது.
இந்த இரண்டு இடத்திலும் எதிர்ப்பு கிளம்ப, பின்பு தாம்கோதி என்ற இடத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக், மேகாலயா கவர்னர் சண்முகநாதன் இவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக தலித் பிரச்சனை எழுப்பப்பட்டு, திருவள்ளுவரின் சிலைக்கு அவமதிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. தாம் கோதி என்ற இடத்தில் அமைக்க இருந்த 12 அடி உயர திருவள்ளுவர் சிலை, கருப்பு பிளாஸ்டிக்கால் பொதியப்பட்டு புல் தரையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சியை ஊடகங்கள் வாயிலாக கண்ட அனைத்து தமிழ் சமுதாயமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவை தலைகுனிய செய்துள்ளது.
அந்த மகானின் சிலைக்கே சாதி சாயலை பூசி இந்த செயலை செய்தவர்கள் மனித பிறவிகள் தானா? என அனைவரும் கேள்வி கேட்கும் வண்ணம் பெரும் பிழையை இழைத்து விட்டனர்.
தமிழ் சமுதாயத்தின் அடையாளம் திருவள்ளுவர், அவரது சிலைக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாக கருதுகிறோம்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு திருவள்ளுவர் சிலையை உரிய மரியாதையோடு நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர் உலகப் பொதுமறை திருக்குறளைத் தந்த செந்நாபோதார் திருவள்ளுவர் சிலை நெகிழி தாளால் சுற்றப்பட்டு, கங்கைக் கரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் புகைப்படத்தை நாளேடுகளில் பார்த்து தமிழினம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
திருவள்ளுவர் சிலை அங்கு நிறுவப்படுவதை எதிர்த்து மதவெறியர்கள் கூக்குரல் எழுப்பினர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று மனிதருள் பிறப்பால் வேற்றுமை இல்லை என்று பாடிய திருவள்ளுவருக்கு சாதி சாயம் பூசும் அவலமும் நடந்தது.
திருவள்ளுவர் சிலையை ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரியார் சவுக் என்ற பகுதியில் நிறுவலாம் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால். அங்கு வள்ளுவர் சிலையை அமைக்கக்கூடாது என்று இந்துத்துவா கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
கங்கைக் கரையில் கம்பீரமாக நிற்கப் போகிறது என்று தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஹரித்துவார் பூங்காவில் ஒரு மூலையில் கிடக்கிறது. ஈறடியால் உலகளந்த திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை மன்னிக்கக் கூடியது அல்ல.
தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. திருவள்ளுவர் சிலையை உரிய முறையில் கங்கைக்கரையில் நிறுவிட உத்தரகாண்ட் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசும் தலையிட்டு திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.