திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும்: உத்தரகாண்ட் முதல்வர் உறுதி
தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.
ஹரித்துவாரில் உள்ள டாம் கோதி பகுதியில் கடந்த மாதம் 29–ந் தேதி சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாநில கவர்னர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அந்த பகுதி கும்பமேளா நடக்கும் இடம் என்பதால் அதிகமான கூட்டம் கூடும். எனவே அந்த இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரியார் சவுக் என்ற பகுதியில் அந்த சிலையை நிறுவும்படி உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரிஷ் ராவத் கேட்டுக் கொண்டார். அதன்படி சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக சிலை அகற்றப்பட்டு தேம் கோதி விருந்தினர் மாளிகை வளாகத்தில் தற்காலிகமாக திறக்கப்பட்டது.
தற்போது அந்த சிலை அங்குள்ள ஒரு பூங்காவில் கருப்பு நிற பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி கட்டப்பட்டு கேட்பாரற்று கிடந்தது. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். டெல்லி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் முதல்வர் ஹரீஷ் ராவத்தை நேரில் சந்தித்து சிலையை உரிய இடத்தில் நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தி.மு.க தலைவர் கருணாநிதி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து ஹிரித்துவாரில் கிடந்த இடத்திலேயே திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாக தருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ‘இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தினால், வட இந்தியாவில் புனித தலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவும் திட்டத்தின் நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும். எனவே, உத்தரகாண்ட் அரசுடன் பேசி இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்றும் முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் கூறுகையில், “திருவள்ளுவர் சிலை குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி கவலைப்பட தேவையில்லை. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். முழு மரியாதையுடன் ஒரு வாரத்தில் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.