அதிமுக அரசை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றுவோம்: ஜெ.பிறந்த தினத்தையொட்டி தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
ஜெயலலிதா பிறந்ததினத்தையொட்டி இன்று சசிகலா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை பிப்ரவரி 24-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த ஆண்டு இத்தனை சோதனை மிகுந்ததாக அமைந்திடும் என்று நாம் ஒரு போதும் எண்ணியதில்லை. ஆனாலும், காலத்தின் சுழற்சியில் இத்தகைய ஒரு வேதனையை நாம் சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது.
எத்தனை துயர் வந்தாலும் எத்தனை இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று துணிவுடன் போராடி தன் மதிநுட்பத்தால் வென்று காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் ஜெயலலிதா. இன்று அதிமுகவுக்கும், கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள இடர்மிகுந்த சூழலை வெற்றி காண்பது தான் ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.
கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் பிறந்த தின விழாக்களில், எப்படி ஏழை, எளிய மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கினோமோ, அதைவிடக் கூடுதலாக இந்தாண்டு மக்களுக்கு வழங்கியும், கட்சிக்கு வலுவூட்டும் செயல்களை செய்யும் வகையில் நம் பணிகள் அமைந்திட வேண்டும்.
கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பிறந்த நாளை அவருடன் இருந்து கொண்டாடினேன். இந்தாண்டு அவர் நினைவாக தனிமையில் துயருற்று இருக்கிறேன். என் இதயமெல்லாம் அவர் நினைவே நிரம்பி இருக்கிறது. அவரை ஒரு நொடி சந்தித்தவர் கூட வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்திருப்பார். அத்தகைய ஆளுமையும், கள்ளமில்லா வெள்ளை உள்ளமும் படைத்த வள்ளலின் வாரிசு ஜெயலலிதா. அவரின் அன்பையும் பாசத்தையும் உழைப்பையும் எண்ணி எண்ணி வேதனைக் கண்ணீர் வடிக்கிறேன்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமைத்த ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டு திசை அறியாது கட்சி தொண்டர்கள் கலங்கி இருந்தனர். அப்போது வழிகாட்டும் ஒளிவிளக்காக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜெயலலிதா வந்துதித்தார். எதிரிகளும் துரோகிகளும் அதிமுகவையும், ஆட்சியையும் வீழத்த நினைத்த நேரத்தில் ஜெயலலிதாவின் ஆன்மா நம்முடன் இருந்து நம்மை வழிநடத்தி, அரசை நிலை நிறுத்தி இருக்கிறது.ஜெயலலிதா தமிழக மக்களுக்காக நிறைவேற்ற நினைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி மக்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். ஜெயலலிதாவின் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் அவரது 69-வது பிறந்த தின நிகழ்ச்சிகள் அமையட்டும்.
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். இயன்ற இடங்களில், அறுசுவை உணவுகளை அன்னதானமாக செய்யுங்கள். கட்சிக் கொடிகள் பட்டொளி வீசி பறக்கட்டும். கட்சி தொண்டர்கள் வாழும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதாவின் உருவப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து மலர் அஞ்சலி செலுத்துங்கள்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி நாம் அனைவரும் மகிழ்ந்தோம். இந்த ஆண்டு அவரின் நினைவுடன் அவரது திருவுருவப் படத்தின் முன் நின்று, ‘ அதிமுகவைக் காப்போம், அதிமுக அரசை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றுவோம், உங்கள் ஆன்மா என்றென்றும் எங்களுக்கு துணை நிற்கட்டும்’ என கைகூப்பி வணங்கி பிரார்த்தித்து, பிறந்தநாளில் சபதமேற்போம்” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.