இதுதான் மோடியின் அரசியல் தர்மம்: தாக்குதல் நடத்தியது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என ராகுல் கடும் தாக்கு
குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்வையிட சென்றார். பனஸ்கந்தாவின் லால்சவுக் பகுதியில் சென்ற ராகுலின் கார் மீது கற்கள் வீசப்பட்டதால், காரின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் ராகுல் காயமின்றி தப்பினார்.
முன்னதாக, குஜராத்துக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பா.ஜனதாவினர்தான் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’என் மீதான தாக்குதலுக்கு பா.ஜ.க.வினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும்தான் காரணம். இதுதான் அவர்களது அரசியல் தர்மம், பிரதமர் மோடியின் அரசியல் தர்மமும்கூட’’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ’’குஜராத்தில் ராகுல் காந்தி தாக்கப்பட்டது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் போல் தெரிகிறது. பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது’’ என குற்றம் சாட்டி உள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.