வருமான வரித்துறையினரை மிரட்டியதாக புகார்: 3 தமிழக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, பணியை செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்ததாக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை வருமான வரி துறையின் புலனாய்வு பிரிவு இயக்குனர் முரளி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் மூலமாக வருமான வரித்துறையினர் புகார் மனு அனுப்பினர்.
அந்த மனுவில், ”அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
தளவாய் சுந்தரம் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெண் அதிகாரி ஒருவரை கடுமையாக மிரட்டினர். எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது அத்துமீறி நுழைந்து இடையூறு செய்த புகாரில், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.