சட்டமன்றத் தேர்தல் ; கட்சித்தலைவர்கள் சென்னையில் போட்டியிட அதிக வாய்ப்பு.
முக்கிய தலைவர்கள் எந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:–
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வினர் விரும்புகிறார்கள்.
என்றாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை சைதாப்பேட்டை தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இந்த தொகுதியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். தொகுதி மக்களை சந்திப்பது, குறை கேட்பது, நலத்திட்ட உதவிகளை செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறார். எனவே மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த முறை தேர்தலில் நிற்க மாட்டார்கள். முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணியின் முக்கிய தலைவராக இருக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவார். இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த கட்சியினர் உறுதியாக கூறுகிறார்கள்.
இந்த கூட்டணியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் அல்லது கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியில் எதை அவர் தேர்ந்தெடுத்தாலும் கூட்டணி அனுமதி அளிக்கும் என்று அந்த கட்சியினர் தெரிவித்தனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த முறை விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வற்புறுத்தி வருகிறார்கள். என்றாலும் அவர் இந்த தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கூட்டணியில் இருந்தாலும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். எனவே விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டால் தொண்டர்கள் தேர்தல் வேலை செய்ய வாய்ப்பாக இருக்கும். ஆகவே விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்று தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பா.ம.க. முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மேட்டூரில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
பா.ம.க.வின் முக்கிய தலைவர்கள் விரும்பும் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும். வேறு கட்சிகள் பா.ம.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் ஒரு சில தொகுதிகளில் மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ராயபுரம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்தனர். வேளச்சேரியிலும் போட்டியிட அவர் தயாராக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜனதா துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி அல்லது மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று அவருக்கு கிடைக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.