உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்த மாணவர் குழுவினருக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு
உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர் குழுவினருக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, “கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான’நாசா’ நடத்திய போட்டியில் கலந்து கொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.
இந்த செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் ‘நாசா’ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.
சென்னையிலிருந்து செயல்படும் “ஸ்பேஸ்கிட்ஸ்” என்ற அமைப்பு இந்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து உதவியது.
இந்த சாதனையினை நிகழ்த்திய மாணவர்கள் ரிஃபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கும், குறிப்பாக அந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்ட ரிஃபாத் சாருக்கிற்கும் இம்மாமன்றத்தின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்த மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினை மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.